திருவண்ணாமலை தீபத் திருநாள்: சாமானிய பக்தர்களுக்காக ‘பாஸ்’ விதிகளை தகர்க்குமா திராவிட மாடல் அரசு?

By இரா.தினேஷ்குமார்

திருவண்ணாமலை: ‘பாஸ்’ உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி என்ற அறிவிப்பால் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் மற்றும் அர்த்தநாரீஸ்வரரை தரிசனம் என்பது சாமானிய பக்தர்களுக்கு வழக்கம்போல் திராவிட மாட ஆட்சியிலும் கானல் நீரானது. பஞ்சபூத திருத்தலங்களில் ‘அக்னி’ திருத்தலமான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா உலக பிரசித்தி பெற்றதாகும்.

காவல் தெய்வம் துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்கி 17 நாட்கள் நடைபெறும். இவ்விழாவின் 10 நாள் உற்சவத்தில், 7-ம் நாள் உற்சவமான மகா தேரோட்டமானது கூடுதல் சிறப்பாகும். ஓரே நாளில் 5 திருத்தேர்களில் சுவாமிகள் எழுந்தருளி, மாட வீதியில் வலம் வருவார்கள். ஒவ்வொரு திருத்தேரும் நிலைக்கு வந்த பிறகு அடுத்த திருத்தேரின் புறப்பாடு இருக்கும்.

17 நாட்கள் நடைபெறும் விழாவில் ‘மிக முக்கியமானது’ 10-ம் நாள் உற்சவத்தில் நடைபெறும் கார்த்திகை தீபம் ஏற்றும் நாளாகும். மூலவர் சந்நிதியில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படும். பின்னர், ‘மலையே மகேசன்’ என போற்றி வணங்கப்படும் 2,668 அடி உயரம் உள்ள ‘திரு அண்ணாமலையார்’ உச்சியில் மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றி வணங்கப்படும்.

மகா தீபத்தை பருவதராஜகுல வம்சத்தினர் ஏற்றுவது மரபாகும். மோட்ச தீபம் என்றழைக்கப்படும் மகா தீப தரிசனத்தை 11 நாட்களுக்கு பக்தர்கள் தரிசிக்கலாம். திரு அண்ணாமலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுவதற்கு முன்பு, அண்ணாமலையார் கோயிலில் உள்ள தங்கக்கொடிமரம் முன்பு உள்ள தீப தரிசன மண்டபத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளுவர்.

அவர்களுக்கு, ‘ஆண் - பெண் சமம்’ என்ற தத்துவத்தை உலகுக்கு எடுத்துரைக்கும் வகையில், தனது இடபாகத்தை உமையவளுக்கு கொடுத்து, “அர்த்தநாரீஸ்வர(ர்)”ராக அண்ணாமலையார் காட்சி கொடுப்பார். இந்நிகழ்வானது, ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும். அர்த்தநாரீஸ்வரர் காட்சி கொடுப்பதை, கடந்த காலங்களில் சிவனடியார்கள், சமானிய பக்தர்கள் உள்ளிட்டோர் தரிசனம் செய்து வந்துள்ளனர்.

அவர்களது எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டு, முற்றிலுமாக தடுக்கப்பட்டு, ‘அதிகார(ம்)’த்தில் உள்ள நபர்களை மட்டும் தமிழக அரசு அனுமதிக்கிறது. அதாவது, சாமானிய பக்தர்களுக்காக நடைபெற்று வந்த விழா, அதிகார வர்க்கத்துக்கான விழாவாக மாற்றப்பட்டுள்ளது. இதே வழிமுறையில், பரணி தீப தரிசனம் நடைபெறும்போது கடைபிடிக்கப்படுகிறது.

பரணி தீபம் தரிசனத்துககு 6,600 நபர்கள், மகா தீப தரிசனத்துக்கு (அர்த்தநாரீஸ்வரர் காட்சி தருதல்) 11,500 நபர்களை அனுமதிப்பது என மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் தெரிவித்துள்ளன. இவர்கள், அனைவருக்கும் பல்வேறு வகைகளில் ‘பாஸ்’ வழங்கப்படுகிறது.

கட்டளைதாரர், உபயதாரர் பாஸ் இந்து சமய அறநிலைய துறை மூலம் வழங்கப்படுகிறது. மேலும், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமல், விஐபி பாஸ் வழங்கும் வழக்கம் உள்ளன. இவர்கள், தங்களது உடைகளில், பல வண்ணங்களில் வழங்கப்பட்ட பாஸ்களை அணிந்து வருவது கடந்த கால நிகழ்வுகளே எடுத்துக்காட்டு. பாஸ் விநியோகம் செய்வதில், கடந்த காலங்களில் பல்வேறு குழப்பங்கள், தவறுகள் ஏற்பட்டதால் ஒரு சில சீர்த்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. க்யூ.ஆர்.கோடு அச்சடிக்கப்பட்டு பாஸ் விநியோகிக்கப்படுகிறது.

பாஸ் விநியோகத்தில் முறைகேடு நடைபெற்று விடக்கூடாது எனக் கூறி, மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் நேரிடையாக கண்காணிக்கிறது. இருப்பினும், வெளிப்படை தன்மை இல்லாததால், முறையாக பாஸ் விநியோகம் செய்யப்படுகிறதா? என்பது அண்ணாமலையாருக்கே வெளிச்சம். இதற்கிடையில், கார்த்திகை தீபத் திருநாளன்று, அண்ணாமலையார் கோயில் உள்ளே ‘பாஸ்’ உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி என இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதனால் சிவனடியார்கள், சாமானிய பக்தர்கள் ஆகியோர் திராவிட மாடல் ஆட்சியிலும் புறக்கணிக்கப் படுகின்றனர்.

பரணி தீபம் மற்றும் அர்த்தநாரீஸ்வரர் தரிசனத்தை காண்பது என்பது கானல் நீரானது. ஏனென்றால், செல்வாக்கு படைத்தவர்களின் கைகளில் மட்டுமே, பாஸ் தஞ்சமடைகிறது. அவர்களுக்கு மட்டுமே தரிசனம் என வரையறுக்கப்பட்டுள்ளது, பிற மதங்களில் இல்லாத ‘அதிகார நுழைவு’ என்பது வெளிச்சம்போட்டு காண்பிக்கின்றனர். சிவனடியார்கள், சிவத்தொண்டு செய்பவர்கள் மற்றும் சாமானிய பக்தர்களை குறிப்பிட்ட எண்ணிக்கையில், வழக்கம்போல் ராஜகோபுரம் வழியாக அனுமதிக்கப்பட வேண்டும்.

ஆனால், பரணி தீபத்துக்கு 6,600 மற்றும் மகா தீபத்துக்கு 11,500 பேருக்கு மட்டுமே அனுமதி, அதவும் பாஸ் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி என கூறுகின்றனர். கூட்டம் அதிகரித்துவிடும், இடம் இருக்காது என்ற விளக்கத்தையும் அமைச்சர் சேகர்பாபு முன்வைக்கின்றார். அதேநேத்தில், கோயில் உள்ளே திட்டமிடப் பட்ட எண்ணிக்கையைவிட, கூடுதல் எண்ணிக்கையில் பலர் உள்ளே இருந்தனர் என கடந்த காலங்களில் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

எனவே, பாஸ் உள்ள நபர்களின் எண்ணிக்கையை குறைத்து, குறைந்தபட்ச எண்ணிக்கையில், ராஜகோபுரம் வழியாக சாமானிய பக்தர்களை அனுமதிக்க முன்வர வேண்டும். பாஸ் விதிகளை தகர்த்தெறிந்து, சாமானிய பக்தர்களையும் அனுமதிக்க திராவிட மாடல் ஆட்சி முன்வந்து, எதிர்காலத்தில் முன் உதாரணமாக திகழவேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும். இதுவே, திராவிட மாடல் ஆட்சியில் கூறப்படும் மெய்யான ஆன்மிக புரட்சியாகும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE