விரதம் இருந்து கடும் பனி உள்ளிட்ட காலநிலையை எதிர்கொண்டுவரும் ஐயப்ப பக்தர்களுக்காக சபரிமலையில் 3 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அன்னதான கூடங்களில் எளிதில் ஜீரணமாகும் சத்தான உணவுகள் வழங்கப்படுகின்றன.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தரிசனத்துக்கு வரும் பக்தர்களுக்கு தினமும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக சந்திதானம் பகுதியில் மாளிகைப்புறத்தம்மன் கோயில் அருகே மிகப்பெரிய அன்னதானக் கூடம் கட்டப்பட்டுள்ளது. இங்கு காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை உணவு வழங்கப்படுகிறது.
இங்கு வரும் பக்தர்களுக்கு நுழைவாயிலில் டோக்கன் வழங்கப்பட்டு வரிசைப்படி உணவுக் கூடத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். கூட்டம் அதிமாக இருக்கும்பட்சத்தில் முதியோர், மாற்றுத் திறனாளிகள், குழந்தைகள் தனி வரிசையில் அன்னதானக் கூடத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
தினமும் காலையில் ரவா உப்புமா, கொண்டைக்கடலை குருமா, சுக்கு காபி, மதிய நேரத்தில் இஞ்சி, சீரகம், கிராம்பு, ஏலக்காய், நெய், காய்கறி உள்ளிட்டவை கலந்த கலவை அரிசி சோறு, இரவில் அரிசி கஞ்சி, ஊறுகாய், காய்கறி கூட்டு தரப்படுகின்றன. சந்நிதானத்தில் மட்டுமின்றி நிலக்கல், பம்பை உள்ளிட்ட பகுதிகளிலும் இதே உணவு வகைகள் வழங்கப்படுகின்றன.
» மாற்றுத்திறனாளிகள் சட்டம் தற்காலிக பணியாளர்களுக்கும் பொருந்தும்: உயர் நீதிமன்றம் உத்தரவு
விரதம் இருந்து கடுங்குளிர், மழை உள்ளிட்ட காலநிலையை எதிர்கொண்டு பக்தர்கள் மலையேறி வருகின்றனர். எனவே, அவர்களுக்கு எளிதில் ஜீரணமாகும் சத்தான உணவு வழங்கப்படுவதாக தேவசம் போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிறப்பு அதிகாரி விளக்கம்: இதுகுறித்து அன்னதான சேவை சிறப்பு அதிகாரி திலீப்குமார் கூறுகையில், மண்டல காலத்தில் இதுவரை சுமார் 6 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. இதில் சந்நிதானத்தில் மட்டும் 4.05 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். பம்பையில் 1.56 லட்சம் பக்தர்களுக்கும், நிலக்கல்லில் 39 ஆயிரம் பேருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்