மயிலாடுதுறை அமிர்தகடேஸ்வரர் கோயில்: ரூ.3 கோடி மதிப்பிலான வெள்ளி ரதம் வெள்ளோட்டம்!

By வீ.தமிழன்பன்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் இன்று (டிச.5) நடைபெற்ற புதிய வெள்ளி ரதம் வெள்ளோட்ட விழாவில், தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஆதீனகர்த்தர்கள் பங்கேற்று வெள்ளோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

திருக்கடையூரில் உள்ள தருமபுரம் ஆதீனத்துக்குட்பட்ட புகழ் பெற்ற அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோயிலில், சென்னை தொழிலதிபர் ஜெயராமன் அய்யர் மற்றும் பக்தர்கள் பங்களிப்புடன் ரூ.3 கோடி மதிப்பீட்டில், சுமார் 250 கிலோ வெள்ளியை கொண்டு புதிதாக செய்யப் பட்டுள்ள வெள்ளி ரத வெள்ளோட்டம் இன்று நடைபெற்றது. இதனையொட்டி, கோயில் கொடிமரம் முன்பு வெள்ளி ரதத்தில் சிறப்பு அலங்காரத்தில் அபிராமி அம்மன் எழுந்தருளினார். தொடர்ந்து வெள்ளி ரத விமானத்துக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது.

இதையடுத்து தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், மதுரை ஆதீனம் 293-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், வேளாக்குறிச்சி ஆதீனம் 18வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், தொண்டை மண்டல ஆதீனம் 234-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சிதம்பரநாத ஞானப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், திண்டுக்கல் ஸ்ரீ சிவபுர ஆதீனம் குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ திருநாவுக்கரசு தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், ரத்தினகிரி தவத்திரு பாலமுருகனடிமை சுவாமிகள் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து வெள்ளி ரத வெள்ளோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

வெள்ளி ரதம் கோயில் இரண்டாவது பிரகாரத்தை வலம் வந்து, மீண்டும் கொடிமரம் அருகே வந்தடைந்தது. மயிலாடுதுறை மக்களவை உறுப்பினர் சுதா, பூம்புகார் சட்டப்பேரவை உறுப்பினர் நிவேதா முருகன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஸ்ரீதர், கூடுதல் ஆணையர் டாக்டர் சுகுமார், மண்டல இணை ஆணையர் சிவக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் உமா மகேஸ்வரி, தருமபுரம் ஆதீன கோயில்களின் தலைமை கண்காணிப்பாளர் மணி, அமிர்தகடேஸ்வரர் கோயில் உள்துறை நிர்வாகி விருதகிரி, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டு வெள்ளி ரதத்தை வடம் பிடித்து இழுத்து, இறைவனை தரிசனம் செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE