நாகர்கோவில்: கோட்டாறு புனித சவேரியார் பேராலய 10ம் நாள் திருவிழாவான இன்று ஆடம்பர கூட்டு திருப்பலி மற்றும் 4 தேர்கள் பவனியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோட்டாறு புனித சவேரியார் பேராலய 10 நாள் திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் திருப்பலி, ஆடம்பர கூட்டு திருப்பலி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 8ம் நாள் திருவிழாவில் இருந்து தொடர்ச்சியாக தேர் பவனி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 10ம் திருவிழாவான இன்று காலை புனித சவேரியார் பெருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலி நடைபெற்றது.
கோட்டாறு மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் நடைபெற்ற இத்திருப்பலி நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். அதைத்தொடர்ந்து திருவனந்தபுரம் உயர்மறை மாவட்ட அருட்தந்தை கிளாடின் அலெக்ஸ் தலைமையில் மலையாளத்தில் திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றன. இதில் குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவை சேர்ந்த பக்தர்கள் திரளானோர் பங்கேற்றனர். பின்னர் விழாவின் சிகர நிகழ்ச்சியான 4 தேர்கள் பவனி நடைபெற்றது.
முதலாவதாக மிக்கேல் அதி தூதர் தேர் செல்ல, அதை பின்தொடர்ந்து செபஸ்தியார், புனித சவேரியார், ஜெப மாதா தேர்கள் இழுத்து வரப்பட்டன. அப்போது கோயில் வளாகத்தில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திகடனாக தேருக்கு மாலை, மெழுகுதிரி, மிளகு ஆகியவற்றை வழங்கினர். தேரை பின்தொடர்ந்த பக்தர்கள் கும்பிட்டு நமஸ்தாரம் செய்தனர். தேர் பவனி கோட்டாறு தெற்கு ரதவீதி, கம்பளம், ரயில்வே ரோடு வழியாக வலம் வந்து இரவில் மீண்டும் சவேரியார் ஆலயத்தை அடைந்தது.
தேர் பவனியில் குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இரவு தேரில் ஆடம்பர கூட்டு திருப்பலி நடைபெற்றது. 10ம் நாள் விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. இதனால் நாகர்கோவில் செட்டிகுளம், மீனாட்சிபுரம், கம்பளம், பறக்கை விலக்கு என கோட்டாறு செல்லும் வழியெங்கும் பக்தர்களாக காட்சியளித்தனர். நாகர்கோவில் மாநகரில் இன்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் அதை சீரமைக்கும் பணியில் போக்குவரத்து போலீஸார் ஈடுபட்டனர்.
நாகர்கோவில் அண்ணா பேரூந்து நிலையத்தில் இருந்து கோட்டாறு வழியாக இயக்கப்படும் அனைத்து பேரூந்துகளும், வாகனங்களும் மாற்று பாதையில் இயக்கப்பட்டன. சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு குமரி மாவட்ட எஸ்பி சுந்தரவதனம் தலைமையில் இன்று நாகர்கோவில் மாநகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.