ஊர் திரும்பும் ஐயப்ப பக்தர்களுக்காக பம்பையில் இருந்து தொலைதூர பகுதிகளுக்கு கேரள பேருந்துகள் இயக்கம்

By என்.கணேஷ்ராஜ்

தேனி: பம்பையில் இருந்து தொலைதூர ஊர்களுக்கு கேரள அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளது. தரிசனம் முடித்த ஐயப்ப பக்தர்கள் சிரமமின்றி ஊர் திரும்ப இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் பம்பையில் இருந்து 18 கிமீ. முன்னதாக நிலக்கல் எனும் இடத்தில் நிறுத்தப்படுகிறது. இங்கு இருந்து பம்பைக்கு கேரள அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் தொடர்ச்சியாக இயக்கப்படுகின்றன. வாகனங்களில் வரும் பக்தர்கள் இந்த சிறப்பு பேருந்துகள் மூலம் பம்பையை அடைகின்றனர்.

இந்நிலையில் இந்த ஆண்டு தமிழ்நாடு அரசு விரைவு பேருந்துகள் மட்டும் பம்பை வரை செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தது. தற்போது கேரள அரசுப் பேருந்துகளும் பம்பையில் இருந்து தொலைதூர ஊர்களுக்கு இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக இங்கிருந்து கேரளத்தைச் சேர்ந்த செங்கனூர், திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோட்டயம், எருமேலி, பத்தனம்திட்டா ஆகிய பகுதிகளுக்கும் தமிழக பகுதியான கம்பம், தேனி, பழனி, தென்காசி உள்ளிட்ட பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதற்காக பம்பை பேருந்து நிலையத்துக்கு 200பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

குறைந்தபட்சம் 40 பேர் இருந்தால் பக்தர்கள் விரும்பும் ஊருக்கு பேருந்துகளை இயக்கவும் கேரள அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. மேலும் பம்பையில் இருந்து திரிவேணி எனும் இடத்துக்கு மூன்று பேருந்துகள் இலவசமாகவும் இயக்கப்பட உள்ளன.

பக்தர்கள் தங்களின் பேருந்து தேவைகளுக்காக கட்டுப்பாட்டு அறை-9446592999, நிலக்கல்-9188526703, திரிவேணி-9497024092, பம்பா-9447577119 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று கேரள அரசு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது. தரிசனம் முடித்த பக்தர்கள் சிரமமின்றி ஊர் திரும்ப இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிதறுகாய் உடைப்பு: சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் எருமேலி, பம்பை கணபதி, சரங்கொத்தி உள்ளிட்ட பகுதிகளில் வழிநெடுகிலும் சிதறு தேங்காய் உடைத்தபடி செல்வர். பின்பு சன்னிதானத்தில் தேங்காயை உடைத்து விட்டு 18-ம்படியில் ஏறுவர். வெள்ளிக்கிழமை ஏராளமான குழந்தைகள் ஆர்வமுடன் இந்த வழிபாட்டை மேற்கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE