குமரியில் இருந்து பம்பைக்கு அரசு பேருந்து சேவை - ஐயப்ப பக்தர்கள் மகிழ்ச்சி

By எல்.மோகன்

நாகர்கோவில்: கன்னியாகுமரி, நாகர்கோயிலில் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்களுக்காக பம்பைக்கு இரு அரசு பேருந்துகள் சேவை இன்று துவங்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் இருந்து முதல்முறையாக பம்பைக்கு பேருந்து இயக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சபரிமலை ஐய்யப்ப பக்தர்கள் சீஸன் தற்போது நடந்து வருவதால் குமரி மாவட்டத்தில் இருந்து தினமும் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் சபரிமலை சென்று வருகின்றனர். இதைப்போல் கன்னியாகுமரிக்கு ரயில், பேரூந்து மூலம் வரும் பக்தர்கள் சபரிமலைக்கு செல்கின்றனர். இதைத் தொடர்ந்து முதல் முறையாக சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், நாகர்கோவில் மண்டலம் சார்பாக, கன்னியாகுமரியில் இருந்து பம்பாவிற்கு (சபரிமலை) வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு முதல் அரசு சிறப்பு பேருந்து இயக்கப்பட்டது.

இதைப்போல் நாகர்கோயில் வடசேரி பேரூந்து நிலையத்தில் இருந்தும் மாலை 6 மணிக்கு பம்பாவிற்கு அரசு பேரூந்து இயக்கப்பட்டது. நாளை முதல் தினமும் காலை 6 மணிக்கு கன்னியாகுமரி, நாகர்கோவிலில் இருந்து இரு அரசு பேரூந்துகள் பம்பாவிற்கு இயக்கப்படுகிறது. சபரிமலை சீஸன் முடியும் ஜனவரி 20ம் தேதி வரை இந்த பேரூந்துகள் இயக்கப்படவுள்ளன.

நாகர்கோயில், திருவனந்தபுரம், கொட்டாரக்கரை, பந்தனம்திட்டா, நிலக்கல் வழியாக இப்பேரூந்துகள் பம்பா செல்கிறது. கன்னியாகுமரியில் இருந்து பம்பாவிற்கு ரூ.383, நாகர்கோவிலில் இருந்து பம்பாவிற்கு ரூ.346 கட்டணமாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. கன்னியாகுமரியில் இருந்து நிலக்கல்லிற்கு ரூ.345, நாகர்கோவிலில் இருந்து நிலக்கல்லிற்கு ரூ.326 கட்டணம் பெறப்படுகிறது.

இதைப்போல் பம்பாவில் இருந்து நாகர்கோவில், கன்னியாகுமரிக்கு அய்யப்ப பக்தர்கள் திரும்பி வருவதற்கான சேவை பக்தர்களின் தேவையை பொறுத்து ஏற்பாடு செய்யப்படும். இச்சேவையை ஐயப்ப பக்தர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் நாகர்கோவில் மண்டல அதிகாரிகள் கூறியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE