அருள்மிகு பாடலாதிரி நரசிம்ம பெருமாள் கோயிலில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

By பெ.ஜேம்ஸ் குமார்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த சிங்கப்பெருமாள் கோயிலில் அமைந்துள்ள அருள்மிகு பாடலாதிரி நரசிம்ம பெருமாள் கோயிலில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா சிறப்பாக நடைபெற்றது.

செங்கல்பட்டை அடுத்த சிங்கப்பெருமாள் கோயிலில் அருள்மிகு பாடலாதிரி நரசிம்ம பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இத்தலத்தில் பெரிய மலையை குடைந்து ஒரே கல்லினால் ஆன நரசிம்மா் உக்கிரத்துடன் சிவபெருமானை போன்று நெற்றிக்கண்ணுடன் மாா்பகத்தில் மகாலட்சுமி உடன் அமா்ந்த கோலத்தில் வலது காலை மடித்து வைத்தும் இடது காலை பூமியில் பதித்தும் பக்தா்களுக்கு காட்சியளிக்கிறாா்.

சுமாா் 1,300 ஆண்டுகளுக்கு முன்னா் பல்லவ மன்னா்களில் ஒருவரான முதலாம் நரசிம்ம வா்மனால் மலையைக் குடைந்து குடைவரைக் கோயிலாக உருவாக்கப்பட்டது. மேலும் விஜய நகர மன்னா்களால் முன் மண்டபங்கள் கட்டப்பட்டதாகவும் தொல்லியல் வரலாறு கூறுகிறது. பக்தா்களின் கவலைகளை தீா்ப்பதற்கான வழிகள் நிச்சயமாக பிறப்பும் என்ற நம்பிக்கையோடு இங்குள்ள மூலவா் சிவந்த மேனி உடனும் நெற்றிக்கண் உடனும் காட்சியளிக்கிறாா்.

இக்கோயிலில் மூலவரை வலம் வர முடியாது. இதனால் மலையை கிரிவலம் வருவது நடைபெறுகிறது. இத்தகைய சிறப்பு மிக்க திருத்தலம் விமான கோபுரமும் மட்ட கோபுரம் ஆக இருந்தது. இந்து சமய அறநிலையத்துறை அனுமதி பெற்று ராஜகோபுரம் கட்டப்பட்டது. இந்நிலையில் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு கருவறை பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் உள்ளிட்ட கருங்கல் சுவாமிகள் பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வந்தன.

திருப்பணிகள் முடிவடைந்த நிலையில் ராஜகோபுரம் மற்றும் விமானங்களும் சந்நிகளும் புதுப்பிக்கப்பட்டு கருங்கல் தரைத்தளம் அமைத்து புதுப்பிக்கப்பட்டு மகா சம்ப்ரோக்ஷணம் திருக்குட நன்னீராட்டு பெருவிழா இன்று காலை வெகு சிறப்பாக நடைபெற்றது.அப்போது, பக்தர்கள் `கோவிந்தா, கோவிந்தா’ என முழக்கமிட்டனர். இதையடுத்து, மூலவருக்கு தீபாரதனை நடைபெற்றது.

கும்பாபிஷேக நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பரசன், மாவட்ட ஆட்சியர் ச அருண் ராஜ் சார் ஆட்சியர் நாராயண சர்மா மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் க. வெங்கடேசன், ஆய்வாளா் தக்காா் பாஸ்கரன், பட்டாச்சாரியா்கள், பணியாளா்கள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE