சபரிமலை​ கோயிலில் பக்தர்​களுக்கு இலவச 24 மணி நேர ஆயுர்வேத சிகிச்சை: தினமும் 1,000 பேர் பயனடைவர்

By என்.கணேஷ்ராஜ்

தேனி: சபரிமலை​யில் ஐயப்ப பக்தர்​களுக்கு இலவச ஆயுர்வேத சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்​யப்​பட்​டுள்​ளது. இந்த மையத்​தில் தினமும் 1,000 பேர் சிகிச்சை பெறுகின்​றனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்காக பக்தர்கள் பலரும் வாகனங்​களில் பம்பை வந்து, அங்கிருந்து மரக்​கூட்​டம், நீலிமலை, சரங்​குத்தி, அப்பாச்​சிமேடு படிப்​பாதை வழியாக பெரிய நடைப்​பந்தலை சென்​றடைகின்​றனர்.

பெரிய பாதையில் பயணம்... பாதயாத்​திரை பக்தர்கள் சத்திரத்​தில் இருந்து புல்​மேடு வழியாக சந்நி​தானத்தை அடைகின்​றனர். எனினும், சபரிமலைக்கான பெரியபாதை என்று அழைக்​கப்​படுவது எருமேலி வனப் பாதை​யாகும்.

பக்தர்கள் அங்கிருந்து பேரூர்​தோடு, காளை​கட்டி, அழுதை, கல்லிடுங்​குன்று, இஞ்சிப்​பாறை, உடும்​பாறை, முக்​குழி, கரிவலம்​தோடு, கரிமலை வழியாக சந்நி​தானத்தை அடைகின்​றனர். பக்தர்கள் பலரும் இந்தப் பாதை வழியாகச் செல்​வ​திலேயே ஆர்வம் காட்டி வருகின்​றனர்.

இந்தப் பாதை அடர் வனப்​பகு​தியாக இருப்​பதுடன், அதிக ஏற்றம், இறக்​கத்​துட​னும், கற்பாறை​களு​ட​னும் அமைந்​துள்ளது. தற்போது மழைக் காலம் என்ப​தால் அதிக குளிர், பனிப்​பொழிவு காரணமாக பலருக்​கும் உடல்​வலி, ஜலதோஷம், காய்ச்​சல், வயிறு தொடர்பான உபாதைகள் ஏற்படுகின்றன. உடல்​நலம் பாதிக்​கும் பக்தர்​களுக்காக சந்நி​தானத்​தில் அரசு சார்​பில் ஆயுர்வேத மருத்​துவமனை அமைக்​கப்​பட்​டுள்​ளது. இங்கு இலவசமாக சிகிச்சை அளிக்​கப்​படு​கிறது.

இதுகுறித்து மருத்துவ அதிகாரி ஹெச்​.கிருஷ்ணகு​மார் கூறும்​போது, “மண்டல பூஜை காலத்​தில் இதுவரை 5,632 பேருக்கு சிகிச்சை அளிக்​கப்​பட்​டுள்​ளது. தினமும் 1,000 பேர் சிகிச்சை பெறுகின்​றனர். இந்த சிகிச்சை மையம் 24 மணி நேரமும் செயல்​படும். மருந்​துகளை உடலில் தேய்த்​தல், ஆவிபிடித்​தல், வலி நீக்கும் எளிய மசாஜ் உள்​ளிட்ட பல்வேறு சிகிச்​சைகள் இங்கு அளிக்​கப்​படு​கின்றன" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE