குமுளி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் முதியோர் மற்றும் குழந்தைகள் விரைவாகவும், சிரமமின்றியும் தரிசனம் செய்யும் வகையில் தனிபாதை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மண்டல காலபூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 15-ம் தேதி நடை திறக்கப்பட்டது. தினமும் ஆன்லைன் மூலம் அதிகபட்சமாக 70 ஆயிரம் பேரும், ஸ்பாட் புக்கிங் மூலம் 10 ஆயிரம் பேரும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
18-ம் படி வழியே நிமிடத்துக்கு 80 பக்தர்கள் செல்கின்றனர். படிகளில் பக்தர்கள் பாதுகாப்பாக ஏறவும், முதியோர், குழந்தைகளை கை தூக்கி விடுவதற்கும் போலீஸார் பணியில் ஈடுபட்டுள்ளனர். 15 நிமிட சுழற்சி அடிப்படையில் இந்த போலீஸார் பணி மாற்றம் செய்யப்படுகின்றனர்.
இந்நிலையில், முதியோர் மற்றும் குழந்தைகள் விரைவாகவும், சிரமம் இன்றியும் தரிசனம் மேற்கொள்வதற்காக சிறப்பு வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி இவர்களுக்கு 18-ம் படிக்கு முன்னதாக உள்ள காத்திருப்பு பகுதியில் இருந்து தனிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதன்வழியே 18-ம் படி ஏறியவுடன் மேல்தள இரும்புப் பாலம் வழியாக சுற்றுப்பாதையில் செல்லாமல் நேரடியாக தரிசனத்துக்கு செல்லலாம். இவர்களுடன் உதவிக்கு கூடுதலாக ஒருவர் செல்லலாம். இந்த வசதியால் முதியவர்களும், குழந்தைகளும் சிரமம் இன்றி குறைந்த நேரத்தில் ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர்.
» குடியரசு தலைவர் நவ. 27-ல் தமிழகம் வருகை: 30-ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்
» திருச்செந்தூர் கோயில் யானை தாக்கி பாகன் உள்ளிட்ட 2 பேர் உயிரிழப்பு
தேவசம்போர்டு விளக்கம்: இதுகுறித்து தேவசம்போர்டு தலைவர் பி.எஸ். பிரசாந்த் கூறும்போது, ‘‘பொதுவாக கூட்டம் இல்லாத நேரங்களில் 18-ம்படி ஏறி வரும் பக்தர்கள் கொடிமரத்தை வணங்கி நேரடியாக மூலஸ்தானம் முன்பு செல்லலாம். தற்போது நெரிசல் அதிகரித்துள்ளதால் முதியோர், குழந்தைகளின் சிரமத்தை குறைக்க தனி வழி அமைக்கப்பட்டுள்ளது. இதில் இவர்கள் எளிதாக சென்று தரிசனம் செய்யலாம்.மற்ற பக்தர்களைப் பொறுத்தவரை 18-ம் படி ஏறியதும் இரும்பு மேம்பாலம் வழியே சந்நிதானத்தின் பின்பகுதி, பக்கவாட்டு பகுதிகளைக் கடந்து முன்புறம் உள்ள மூலஸ்தான பாதைக்கு வர வேண்டும்’’ என்றார்.