சபரிமலை ஐயப்பனுக்கு மங்கல இசை முழங்க சந்தன அபிஷேக சிறப்பு வழிபாடு - பக்தர்கள் ஆரவாரம்!

By என்.கணேஷ்ராஜ்

தேனி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் வேதமந்திரங்கள், மங்கல இசை முழங்க இன்று சந்தன அபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சரணகோஷங்களை எழுப்பி ஆராவாரத்துடன் சுவாமியை தரிசனம் செய்தனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல கால பூஜைக்கான வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. இதன்படி 3-ம் நாளான இன்று (நவ.18) அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு நெய் அபிஷேகம், கணபதிஹோமம் உள்ளிட்டவை நடைபெற்றது. இந்நிலையில் மதியம் 12 மணிக்கு ஐயப்பனுக்கு சந்தன அபிஷேகம் நடைபெற்றது. இதற்காக கோயிலில் அரைக்கப்பட்ட சந்தனத்தை குடத்தில் வைத்து கோயில் வளாகத்தில் சுற்றி வரப்பட்டது.

நம்பூதிரி பிரம்மதத்தன் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதரி ஏந்திச் சென்றார். கீழ்சாந்தி கிருஷ்ணன் ஆகியோர் பூஜைப் பொருட்களுடன் பின்தொடர்ந்தனர். நாதஸ்சுரம், தவில் உள்ளிட்ட மங்கல இசை முழங்கப்பட்டன. கோயில்வளாகம், பரிவார சந்நதிகள் மற்றும் கொடிக்கம்பத்தை சுற்றி மூலவர் சந்நிதிக்கு வேத மந்திரங்கள் முழங்க சந்தனக் குடம் கொண்டு செல்லப்பட்டது.

பின்பு நம்பூதிரி பிரம்மதத்தன் ஐயப்பனுக்கு சந்தன அபிஷேகம் செய்தார். ஏராளமான பக்தர்கள் ஆர்வமுடன் தரிசனம் செய்தனர். தொடர்ந்து இரவில் புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை நடைபெற உள்ளது. இரவு11 மணிக்கு ஹரிவராசனம் எனும் தாலாட்டு பாடலுடன் நடை சாத்தப்பட்டு அடுத்தநாள் வழிபாட்டுக்காக நாளை(நவ.19) அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE