செங்கல்பட்டு: செங்கல்பட்டு ஸ்ரீ வீரபத்திர ஸ்வாமி கோயில் கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்ற நிலையில், அமைச்சர் அன்பரசன் காலதாமதமாக வந்ததால் கும்பாபிஷேகம் 45 நிமிடம் நிறுத்தப்பட்ட பக்தர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட பெரிய மணிக்கார தெருவில் பழமை வாய்ந்த ஸ்ரீ வீரபத்ர சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக இக்கோயிலில் புதிய விமான கோபுரம் அமைத்து கும்பாபிஷேகம் செய்ய கடந்த 10 மாதங்களுக்கு முன்பு பாலாலயம் நடைபெற்றது.
பணிகள் நிறைவுற்ற நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை 15ம் தேதி கும்ப கலசங்கள் நிறுவி யாகசாலைகள் அமைத்து விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேக பணிகள் தொடங்கியது. தொடர்ந்து 108 மூலிகை ஹோமங்கள் அஷ்டபந்தனம் சாற்றுதல், நாடி சந்தானம் உள்ளிட்ட பூஜைகளும் நடைபெற்றது.
» சபரிமலை கோயிலில் மண்டல பூஜை தொடங்கியது: 30 ஆயிரம் பேர் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம்
» ஐயப்ப பக்தர்களின் அவசரகால தொடர்புக்காக சபரிமலையில் இலவச வைஃபை வசதி தொடக்கம்
இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (நவ.17) மகா பூர்ணாஹூயுடன் யாகசாலை பூஜைகள் நிறைவுற்றது. பின்னர் யாகசாலையில் இருந்து காலை சுமார் 9:30 மணி அளவில் கும்ப கலசங்கள் புறப்பட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க வான வேடிக்கையுடன் விமான கோபுரத்தை அடைந்தது. அப்போது குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் வருகைக்காக கும்ப கலசங்களில் புனித நீர் ஊற்றும் நிகழ்வு நிறுத்தப்பட்டது.
சுமார் 45 நிமிடங்கள் தாமதமாக அமைச்சர் கோயிலுக்கு வருகை தந்தார். பின்னர் கோபுர கலசங்கள் மீது கும்ப கலச நீர் ஊற்றி ஸ்ரீ வீரபத்ர சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அமைச்சரின் வருகைக்காக சிறிது நேரம் கும்பாபிஷேகம் நிறுத்தியது பக்தர்களிடையே அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது.
இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் எம்.பி. செல்வம், எம்.எல்.ஏ வரலட்சுமி, இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் ராஜலட்சுமி, கோயில் செயல் அலுவலர் சரஸ்வதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.