திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவை முன்னிட்டு வைகுண்ட ஏகாதசி திருநாள் திருக்கொட்டகை ஸ்தம்ப ஸ்தாபனம் (முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி) வைபவம் நடைபெற்றது.
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும், 108 திவ்யதேசங்களில் முதன்மையானது திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில். இக்கோயிலில் ஆண்டு தோறும் விசேஷங்கள் நடைபெறும். வைகுண்ட ஏகாதசி பெருவிழாவில் பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு முக்கிய விசேஷமானது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா வரும் டிசம்பர் மாதம் 30ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி ஜனவரி 20ம் தேதி வரை நடைபெறுவுள்ளது.
டிசம்பர் 31ம் தேதி பகல் பத்து உற்வசம் தொடங்குகிறது. 2025 ஜனவரி 9ம் தேதி மோகினி அலங்காரமும், முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் திறப்பு ஜனவரி 10ம் தேதியும் நடைபெறவுள்ளது. தொடர்ந்து, 16ம் தேதி திருக்கைத்தல சேவையும், 17ம் தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், 19ம் தேதி தீர்த்தவாரியும், 20ம் தேதி நம்மாழ்வார் மோட்சமும் நடைபெறுகிறது.
இவ்விழாவை முன்னிட்டு ரங்கநாதர் கோயில் ஆயிரங்கால் மண்டபம் அருகே பந்தல் கால் நடும் நிகழ்ச்சி காலை 10.45 மணிமுதல் காலை 11.45 மணிக்குள் நடந்தது. இந்த நிகழ்ச்சியின் போது ஆயிரங்கால் மண்டபத்தில் கோயில் பட்டர்கள் வேதமந்திரங்கள் சொல்ல மேள, தாளங்கள் முழங்க கோயில் யானை ஆண்டாள் ஆயிரங்கால் மண்டபத்திற்கு அருகில் நின்றபடி மரியாதை செலுத்தியது.
» சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் மண் விளக்கு வைத்து வழிபாடு!
» தென்திருப்பதி ஸ்ரீ வாரி ஆலயத்தில் புஷ்ப யாக வைபவம்: 51 வகையான மலர்களால் மலர் அபிஷேகம்
அடுத்து முகூர்த்த பந்தல் காலில் புனிதநீர் ஊற்றி, சந்தனம், மாவிலை மற்றும் மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் பந்தல் காலை கோயில் பணியாளர்கள் நட்டனர். இதனை தொடர்ந்து ஆயிரங்கால் மண்டபம் அருகே கூடுதல் பந்தல் கால்கள் ஊன்றி திருக்கொட்டகை அமைக்கும் பணி நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் கோயில் இணை ஆணையர் மாரியப்பன், அர்ச்சகர் சுந்தர் பட்டர், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.