சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் மண் விளக்கு வைத்து வழிபாடு!

By இரா.கார்த்திகேயன்

காங்கயம்: காங்கயம் அருகே சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில், இன்று முதல் மண் விளக்கு வைத்து வழிபாடு நடத்தப்படுகிறது.

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே சிவன்மலையில் புகழ்பெற்ற சுப்பிரமணிசாமி கோயில் உள்ளது. இங்கு 'ஆண்டவன் உத்தரவு' என்ற பெயரில், ஏதாவது ஒரு பொருளை வைத்து சிறப்புப் பூஜை செய்யப்படுவது வழக்கம். பின்னர் அப்பொருளை கோயில் மூலவர் அறைக்கு முன்பாக கல் தூணில் உள்ள கண்ணாடி பேழைக்குள் வைத்து, பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்படும்.

கண்ணாடி பேழைக்குள் என்ன பொருளை வைக்க வேண்டும் என்ற தேர்வு முறை வித்தியாசமானது. பக்தர் ஒருவர் கனவில் சிவன்மலை முருகன் வந்து, குறிப்பிட்ட பொருளை வைத்து பூஜை செய்ய உத்தரவிடுவதாகக் கூறப்படுகிறது. இதனால்தான், 'ஆண்டவன் உத்தரவு' என்றும் இது அழைக்கப்படுகிறது.

கண்ணாடி பேழைக்குள் வைக்கப்படும் பொருளுக்கு கால நிர்ணயம் எதுவும் இல்லை. மற்றொரு பக்தரின் கனவில் வந்து அடுத்த பொருளை சுட்டிக்காட்டும் வரையில், பழைய பொருளே வைக்கப்பட்டிருக்கும். அப்பொருள் தேசிய அளவில் முக்கியத்துவம் பெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக போற்றப்படுகிறது.

அதன்படி கரூரைச் சேர்ந்த பக்தர் தணிகைநாதனின் கனவில் மண் விளக்கு வந்ததாக கூறப்பட்ட நிலையில் இன்று கண்ணாடி பேழைக்குள் மண் விளக்கு வைத்து பூஜை செய்யப்பட்டு பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. இதனை பக்தர்கள் வழிபட்டு மகிழ்ந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE