மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் ஏழாம் நாளான இன்று சட்டத் தேரோட்டம் நடைபெற்றது. இதில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளினார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா நவ.2-ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்களும் காப்பு கட்டி விரதம் மேற்கொண்டனர். தினமும் சண்முகர் சன்னிதியில் காலை, மாலையில் சண்முகார்ச்சனை நடந்தது. இரவு 7 மணியளவில் விடையாத்தி சப்பரத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் திருவாச்சி மண்டபத்தில் எழுந்தருளினார்.
முருகப்பெருமான் அசுரனை வதம் செய்வதற்காக நேற்று முன் தினம் சத்தியகிரீஸ்வரர் முன்னிலையில் கோவர்த்தனாம்பிகையிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. சூரசம்ஹாரத்தை முன்னிட்டு நேற்று மாலையில் உற்சவர் சன்னிதியிலிருந்து முருகப்பெருமான் தங்க மயில் வாகனத்தில் புறப்பாடாகினர். வீரபாகுத்தேவர், பத்மாசூரன் தனித்தனி வாகனங்களின் வீதி உலா வந்து சன்னிதி தெருவிலுள்ள சொக்கநாதர் கோயில் முன்பு எழுந்தருளினர். அங்கு முருகப்பெருமான் அசுரனை எதிர்கொண்டு வென்று சூரசம்ஹாரம் செய்தார். அப்போது மழையில் நனைந்தவாறே பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
» கந்த சஷ்டி விழா நிறைவாக சென்னிமலை முருகன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்
» மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயிலில் பூதத்தாழ்வார் திருத்தேர் உற்சவம்
சஷ்டி திருவிழாவின் ஏழாம் நாளான இன்று காலை உற்சவர் சன்னிதியில் இருந்து சர்வ அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் தங்கமயில் வாகனத்தில் புறப்பட்டு கோயில் முன்பு சட்டத் தேரில் எழுந்தருளினர். அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வீர வேல்முருகனுக்கு அரோகரா” என்று கோஷங்கள் முழங்க சட்டத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
இந்த சட்டத்தேரானது சன்னிதி தெரு வழியாக கீழ ரத வீதி, பெரிய ரதவீதி வழியாக மலையைச் சுற்றி வந்து மேலரத வீதி, சன்னிதி தெரு வழியே நிலையை அடைந்தது. காலை 8.30 மணிக்கு தொடங்கிய தேரோட்டம் 10.30 மணியளவில் நிலையை அடைந்தது. இன்று மாலையில் பாவாடை தரிசனம் நடைபெறும். இத்துடன் கந்த சஷ்டி திருவிழா நிறைவு பெறும். அத்துடன், காப்புக் கட்டி விரதம் இருந்த பக்தர்கள் விரதம் முடிக்கின்றனர்.
விழா ஏற்பாடுகளை கோயில் துணை ஆணையர் சூரிய நாராயணன், அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா, அறங்காவலர்கள் மணிச்செல்வம், பொம்மத்தேவன், சண்முகசுந்தரம், ராமையா, பட்டர்கள், கோயில் பணியாளார்கள் செய்திருந்தனர்.