கந்த சஷ்டி விழா: பழநியில் சூரன்களை வதம் செய்த சின்னக்குமாரர்!

By ஆ.நல்லசிவன்

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநியில் கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வியாழக்கிழமை (நவ.7) இரவு சூரசம்ஹாரத்தில் பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் சூரன்களை சின்னக்குமாரசுவாமி வதம் செய்தார். நாளை (நவ.8) திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.

அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா நவ.2ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. மலைக்கோயிலில் மூலவர், உற்சவருக்கு காப்பு கட்டப்பட்டதை தொடர்ந்து விநாயகர், துவாரபாலகர்கள், நவ வீரர்களுக்கு காப்பு கட்டப்பட்டது. கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலையில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வியாழக்கிழமை (நவ.7) இரவு கிரி வீதிகளில் நடைபெற்றது. இதையொட்டி, இன்று (நவ.7) அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், காலை 4.30 மணிக்கு விளா பூஜை, நண்பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை, பிற்பகல் 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெற்றது. சூரசம்ஹாரத்தையொட்டி, காலை 11 மணி வரை மட்டுமே மலைக்கோயிலுக்கு அனுமதிக்கப்பட்டனர்.

சஷ்டியை முன்னிட்டு விரதமிருந்த பக்தர்கள் இன்று காலை முதலே திருஆவினன்குடி கோயிலில் தண்டு விரதம் இருந்னர். அதாவது, வாழைத் தண்டு, இஞ்சி, ஆப்பிள், ஆரஞ்சு,திராட்சை உள்ளிட்ட பழ வகைகள், தயிர் ஆகியவற்றை கொண்டு பிரசாதம் தயார் செய்து சுவாமிக்கு படைத்து விரதத்தை நிறைவு செய்தனர். மலைக்கோயிலில் மாலை 3.10 மணிக்கு மலைக்கொழுந்து அம்மனிடம் சூரனை வதம் செய்ய சின்னக்குமார சுவாமி வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து, சந்நிதி அடைக்கப்பட்டது.

பராசக்தி வேலை திருஆவினன்குடி முருகன் கோயிலுக்கு சென்று பூஜை செய்த பின், இரவு 7 மணிக்கு வடக்கு கிரி வீதியில் தாரகாசூரனை சின்னக்குமார சுவாமி வதம் செய்தார். தொடரந்து, கிழக்கு கிரிவீதியில் பானுகோபன் சூரன், தெற்கு கிரிவீதியில் சிங்கமுகாசூரன், மேற்கு கிரிவீதியில் சூரபத்மன் ஆகியோரை அடுத்தடுத்து சின்னக்குமார சுவாமி வதம் செய்தார். அப்போது, பக்தர்களின் ‘அரோகரா’ கோஷம் விண்ணைப் பிளந்தது. உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, செந்தில்குமார் எம்எல்ஏ., கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் வெங்கடேஷ், உதவி ஆணையர் லட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சூரசம்ஹாரத்தை காண உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் திரளான பக்தர்கள் அடிவாரம், கிரிவீதியில் கூடியிருந்தனர். சூரசம்ஹாரம் முடிந்ததும் இரவு 9 மணிக்கு மேல் ஆரியர் மண்டபத்தில் வெற்றி விழாவும், மலைக்கோயிலுக்கு சென்ற பின் சம்ப்ரோட்சனம் மற்றும் அர்த்தஜாம பூஜையும் நடைபெற்றது. நாளை (நவ.8) காலை 9.30 மணிக்கு மேல் மலைக்கோயிலில் வள்ளி, தேவசேனா சமேத சண்முகருக்கும், பெரியநாயகியம்மன் கோயிலில் இரவு 8 மணிக்கு மேல் வள்ளி, தேவசேனா முத்துக்குமார சுவாமிக்கும் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE