திருப்பரங்குன்றம் கோயிலில் சூரசம்ஹாரம் - மழையில் நனைந்தபடி பக்தர்கள் தரிசனம்

By சுப.ஜனநாயகச்செல்வம்

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் ஆறாம் நாளான இன்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மழையில் நனைந்தவாறே பங்கேற்றனர்.

முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா நவ.2-ல் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்களும் காப்பு கட்டி விரதம் மேற்கொண்டனர். தினமும் சண்முகர் சன்னதியில் காலை, மாலை வேலைகளில் சண்முகார்ச்சனை நடைபெற்றது. இரவு 7 மணியளவில் விடையாத்தி சப்பரத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் திருவாச்சி மண்டபத்தில் எழுந்தருளினார்.

அதனைத்தொடர்ந்து சூரசம்ஹாரத்தை நேற்று கோவர்த்தனாம்பிகையிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. சூரசம்ஹாரத்தை முன்னிட்டு இன்று மாலையில் உற்சவர் சன்னதியிலிருந்து முருகப்பெருமான் தங்க மயில் வாகனத்தில் புறப்பாடானார். வீரபாகுத் தேவர், பத்மாசூரன் தனித்தனி வாகனங்களின் வீதி உலா வந்து சன்னதி தெருவிலுள்ள சொக்கநாதர் கோயில் முன்பு எழுந்தருளினர். சூரசம்ஹாரம் லீலைகள் குறித்து அஜித் பட்டர் விளக்கி கூறினார்.

பின்னர் முருகப்பெருமான் அசுரனை எதிர்கொண்டு வென்று சூரசம்ஹாரம் செய்தார். பின்பு தீப, தூப ஆராதனைகள் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மழையில் நனைந்தவாறே பங்கேற்றனர். பின்பு இரவில் கோயில் ஆஸ்தான் மண்டபத்தில் முருகன், தெய்வானை மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. தீப, தூப ஆராதனைகளுக்குப்பின்பு பூச்சப்பரத்தில் முருகன், தெய்வானை எழுந்தருளினார்.

நிறைவு நாளான நாளை (நவ.8) காலை 8.30 மணியளவில் முருகன், தெய்வானையுடன் தங்கமயில் வாகனத்தில் சட்டத் தேரில் எழுந்தருள்கிறார். மாலையில் பாவாடை தரிசனம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோயில் துணை ஆணையர் சூரிய நாராயணன், அறங்காவலர் குழுத்தலைவர் சத்யபிரியா தலைமையில் அறங்காவலர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர். சுமார் 350க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE