திருவண்ணாமலை - நாளை காலை அண்ணாமலையார் திருத்தேர் வெள்ளோட்டம்!

By இரா.தினேஷ்குமார்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் ‘அண்ணாமலையார் திருத்தேர்’ வெள்ளோட்டம் நாளை (நவம்பர் 8-ம் தேதி) காலை நடைபெற உள்ளது.

பஞ்சபூத திருத்தலங்களில் ‘அக்னி’ திருத்தலமான திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் கார்த்திகைத் தீபத் திருவிழாவானது உலக பிரசித்தி பெற்றதாகும். காவல் தெய்வான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்கி 17 நாட்கள் நடைபெறும். மூலவர் சந்நிதி முன்பு உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டதும், 10 நாள் உற்சவம் ஆரம்பமாகும். இதில் 7ம் நாள் உற்சவத்தில் நடைபெறும், ‘மகா தேரோட்டம்’ சிறப்புமிக்கது.

விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகர், உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனித்தனி திருத்தேர்களில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, மாட வீதியில் வலம் வந்து அருள்பாலிப்பர். ஒவ்வொரு திருத்தேரும் நிலையை வந்தடைந்த பிறகு, அடுத்த திருத்தேரின் புறப்பாடு இருக்கும். காலையில் தொடங்கும் மகா தேரோட்டம் நள்ளிரவு வரை நீடிக்கும்.

ஓரே நாளில் 5 திருத்தேர்களில் பவனி வரும் சுவாமிகளை தரிசிக்க, தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து பல லட்சம் பக்தர்கள் திரள்வர். இத்தகைய சிறப்புமிக்க ‘மகா தேரோட்டம்’ டிசம்பர் 10ம் தேதி வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. இதையொட்டி, ஐந்து திருத்தேர்களை சீரமைக்கும் பணி நடைபெறுகிறது.

இதில் உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் எழுந்தருளும் ‘பெரியத் தேர்’ 59 அடி உயரம் 200 டன் எடை கொண்டதாகும். அண்ணாமலையார் திருத்தேரை ரூ.70 லட்சத்தில் புதுப்பிக்கும் பணி நடைபெற்றுள்ளது. எழில்மிகு தோற்றத்துடன் கம்பீரமாக அண்ணாமலையார் தேர் காட்சி தருகிறது. பெரியத் தேரின் உறுதி தன்மையை ஆய்வு செய்து, பொதுப்பணித் துறை ஒப்புதல் வழங்கி உள்ளது.

மேலும் பெரியத் தேர் வலம் வரும் மாட வீதியில் உள்ள சாலையும் உறுதியாக உள்ளது என நெடுஞ்சாலைத் துறையும் தெரிவித்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவிக்கின்றது. இதைத்தொடர்ந்து ‘அண்ணாமலையார் திருத்தேர்’ வெள்ளோட்டம் நாளை (நவம்பர் 8ம் தேதி) காலை 7 மணி முதல் 8.30 மணிக்குள் தொடங்க உள்ளது. சுமார் 5 மணி நேரம் வெள்ளோட்டம் நடைபெறக்கூடும் என கூறப்படுகிறது.

திருத்தேர் வெள்ளோட்ட ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்துள்ளது. இதனை ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்து, தொடர் கண்காணிப்பில் உள்ளார். மேலும் வெள்ளோட்டம் நடைபெற உள்ள மாட வீதியில் இருந்த ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றி உள்ளனர். திருத்தேர் வெள்ளோட்டம் நடைபெறும்போது, மின்சாரத்தை துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அவசர தேவைக்காக 108 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருக்க சுகாதாரத் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வது குறித்து காவல் கண்காணிப்பாளர் சுதாகர் கள ஆய்வில் ஈடுபட்டுள்ளார். சுமார் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE