திருப்போரூர், குன்றத்தூர், வல்லக்கோட்டை முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழா

By KU BUREAU

திருப்போரூர்: வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயில், குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆகியவற்றில் கந்த சஷ்டி விழா நேற்று முன்தினம் தொடங்கியது. 2-ம் நாளான நேற்று வல்லக்கோட்டை முருகர் வெள்ளை மலர் அலங்காரத்திலும், குன்றத்தூர் முருகன் சிறப்பு அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இந்த இரு கோயில்களிலும் சூரசம்ஹாரம் விழா வரும் 7-ம் தேதி நடைபெறுகிறது.

இதேபோல் திருப்போரூரில் உள்ள சிறப்பு பெற்ற கந்தசுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா நேற்று முன்தினம் காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு கிளி வாகனத்தில் முருகப்பெருமான் வீதி உலா நடைபெற்றது. நேற்று (நவ.3-ம் தேதி) இரவு ஆட்டுக்கிடா வாகனத்தில் முருகப்பெருமான் வீதி உலா நடந்தது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரபத்மனை முருகப் பெருமான் வதம் செய்யும் கந்த சஷ்டி விழா வரும் 7-ம் தேதி வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. முருகப்பெருமான் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி தங்கவேல் கொண்டு சூரபத்மனை வதம் செய்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE