முருகன் கோயில்களில் குவிந்த பக்தர்கள் - கந்த சஷ்டி விழா கோலாகல தொடக்கம்

By KU BUREAU

திருவள்ளூர் / திருப்போரூர் / காஞ்சி: திருத்தணி, சிறுவாபுரி, திருப்போரூர், குமரக்கோட்டம் முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழா தொடங்கியது. எண்ணற்ற பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தமிழகம் முழுவதும் கந்தசஷ்டி விழா நேற்று தொடங்கியது. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோயிலில் அதிகாலை, 5 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. காலை 8 மணிக்கு உற்சவர் சண்முகர் சிறப்பு அலங்காரத்தில் மலைக் கோயிலில் உள்ள காவடி மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர், கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் ஸ்ரீதரன், இணை ஆணையர் ரமணி,   ஆகியோர் லட்சார்ச்சனை விழாவை தொடங்கி வைத்தனர்.

லட்சார்ச்சனைக்கு கட்டணம் செலுத்திய பக்தர்கள் மட்டும் காவடி மண்டபத்துக்குள் அனுமதிக்கப்பட்டு,உற்சவருக்கு லட்சார்ச்சனை நடத்தப்பட்டது. பிற பக்தர்கள் காவடி மண்டபத்தில் அமர்ந்து லட்சார்ச்சனையை காண ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இன்று (3-ம் தேதி) மூலவருக்கு பட்டு, நாளை (4-ம் தேதி) தங்கக் கவசம், 5-ம் தேதி திருவாபரணம், 6-ம் தேதி மூலவருக்கு வெள்ளி கவச அலங்காரம், 7-ம் தேதி காலை சந்தன காப்பு போன்ற அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது.

மாலை 6 மணிக்கு காவடி மண்டபத்தில் உற்சவர் சண்முகப் பெருமானுக்கு, புஷ்பாஞ்சலியும், மறுநாள் 8-ம் தேதி காலை 10 மணிக்கு உற்சவர் முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. ஆறுபடை வீடு முருகன் கோயில்களில் கடைசி நாளில் சூரசம்ஹாரம் நடைபெறும், ஆனால், திருத்தணி கோயிலில் முருகப் பெருமான் சினம் தணிந்தஇடம் என்பதால், சூரசம்ஹாரத்துக்கு பதிலாக புஷ்பாஞ்சலி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில் நேற்று முன்தினம் ஸ்ரீ விநாயகர் பூஜை,வாஸ்து சாந்தி உள்ளிட்டவை நடைபெற்றன. நேற்று காலை கொடி ஏற்றும் நிகழ்ச்சி கோயிலின் தலைமை குருக்கள் ஆனந்தன் தலைமையில் நடைபெற்றது.

திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா நேற்று காலை 5.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து பல்லக்கு உற்சவம் நடந்தது. நேற்று இரவு 7 மணிக்கு கிளி வாகனத்தில் முருகப்பெருமான் வீதி உலா நடந்தது.

காஞ்சிபுரம் மேற்கு ராஜ வீதியில் அமைந்துள்ள கந்தபுராணம் அரங்கேறிய திருத்தலமாக விளங்கி வரும் குமரக்கோட்டம் முருகன்கோயிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி முதல் நாள் உற்சவருக்கு மஞ்சள் புஷ்பங்களால் அலங்காரம் செய்யப்பட்டது. கோயில் வளாகத்தில் ஏராளமான பக்தர்கள் 108 முறைவலம் வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE