திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி விழா தொடங்கியது

By KU BUREAU

தூத்துக்குடி / பழநி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் நேற்று காலை தொடங்கியது. இதையொட்டி, கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பந்தல்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சஷ்டி விரதத்தை தொடங்கினர்.

அரக்கன் சூரபத்மனை, சுவாமி ஜெயந்திநாதர் வதம் செய்த புராணச் சிறப்பு வாய்ந்த தலம் என்பதால், திருச்செந்தூரில் நடைபெறும் கந்தசஷ்டி விழா பிரசித்தி பெற்றது. நடப்பாண்டு கந்தசஷ்டி விழாவையொட்டி நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, வள்ளி, தெய்வானையுடன் சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலையில் எழுந்தருளினார்.

அங்கு விக்னேஸ்வர பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, யாகசாலையில் ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானைக்கு மகா தீபாராதனை நடந்தது. பின்னர், ஜெயந்திநாதர் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி, வேல்வகுப்பு, வீரவாள் வகுப்பு பாடல்கள், மேளவாத்தியங்களுடன் சண்முக விலாச மண்டபத்தில் எழுந்தருளினார்.

மாலையில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் திருவாவடுதுறை ஆதின கந்த சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் தங்கத் தேரில் சுவாமி கிரிஉலா வந்தார்.

விழாவைொயட்டி நேற்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலிலும், நாழிக்கிணற்றிலும் புனித நீராடி, பச்சை நிற ஆடை அணிந்து, கோயில் கிரி பிரகாரத்தில் அங்கப் பிரதட்சணம் செய்து விரதத்தைத் தொடங்கினர். கோயில் வளாகத்தில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள கொட்டகைகளில் பக்தர்கள் குழுக்களாக அமர்ந்து, பஜனை பாடல்கள் பாடி விரதமிருந்து வருகின்றனர்.

இன்று முதல் வரும் 6-ம் தேதி வரை தினமும் அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, யாகசாலை பூஜைகள் நடைபெறுகின்றன. முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் 7-ம் தேதி மாலை 4.30 மணிக்கு மேல் கடற்கரையில் நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். வரும் 8-ம் தேதி இரவு திருக்கல்யாணம் நடக்கிறது.

விழா நாட்களில் பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என்பதால், பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருச்செந்தூரில் உள்ள விடுதிகள், சத்திரங்கள் நிரம்பியுள்ளன. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் ரா.அருள்முருகன், இணை ஆணையர் சு.ஞானசேகரன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

பழநி முருகன் கோயிலில்... இதேபோல, பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா நேற்று பகல் 12 மணிக்கு காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி, மூலவர், விநாயகர், சண்முகர், மயில், துவார பாலகருக்கு காப்பு கட்டப்பட்டது. இணை ஆணையர் மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவையொட்டி, யானை கஸ்தூரி யானைப் பாதை வழியாக மலைக் கோயிலுக்குச் சென்றது. சூரசம்ஹாரம் வரை யானை கஸ்தூரி மலைக் கோயிலில் தங்கியிருக்கும். முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் 7-ம் தேதி மாலை நடைபெற உள்ளது. அன்று மாலை சின்னக்குமாரசுவாமி அசுரர்களை வதம்புரிவதற்காக மலைக்கொழுந்து அம்மனிடம் வேல் வாங்குதல் நிகழ்ச்சியுடன் சந்நிதி அடைக்கப்படும்.

திருஆவினன்குடி கோயிலில் பராசக்தி வேலுக்கு பூஜை செய்யப்பட்டு, மாலையில் வடக்கு கிரிவீதியில் தாரகாசூரன் வதமும், கிழக்கு கிரிவீதியில் பானுகோபன்சூரன் வதமும், தெற்கு கிரிவீதியில் சிங்கமுகாசூரன் வதமும், மேற்கு ரதவீதியில் சூரபத்மன் வதமும் நடைபெற உள்ளது. இரவு 9 மணிக்கு ஆரியர் மண்டபத்தில் வெற்றி விழாவை தொடர்ந்து, சுவாமி மலைக்கோயிலுக்கு சென்று சம்ப்ரோட்சண பூஜை நடைபெறும். வரும் 8-ம் தேதி காலை மலைக்கோயிலில் வள்ளி தேவசேனா சமேத சண்முகருக்கும், இரவு பெரியநாயகியம்மன் கோயிலில் வள்ளி தேவசேனா சமேத முத்துக்குமாரசுவாமிக்கும் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE