நவராத்திரி பூஜைக்கு பின்பு திருவனந்தபுரத்தில் இருந்து குமரி திரும்பிய சுவாமி விக்கிரகங்கள்!

By எல்.மோகன்

நாகர்கோவில்: திருவனந்தபுரம் நவராத்திரி பூஜைக்குச் சென்ற சுவாமி விக்கிரங்கள் இன்று (அக்.17) குமரிக்குத் திரும்பின.

திருவிதாங்கூர் மன்னர் ஆட்சி காலத்தில் பத்மநாபபுரம் அரண்மனையில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. 1840-ம் ஆண்டுக்கு பின்னர் இவ்விழா திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக குமரி மாவட்டத்திலிருந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், குமாரகோவில வேளிமலை முருகன், பத்மநாபபுரம் தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் விக்கிரகங்கள் ஊர்வலமாக திருவனந்தபுரம் கொண்டு செல்லப்பட்டு நவராத்திரி விழாவில் பங்கேற்கும். விழா முரிந்த பிறகு அந்த விக்கிரகங்கள் மீண்டும் குமரி மாவட்டத்திற்கு வந்து சேர்வது வழக்கம்.

இந்த ஆண்டு விழாவுக்கு விக்கிரகங்கள் கொண்டு செல்லப்பட்டு 9 நாள் அங்கு பூஜையில் வைக்கப்பட்டு பின்னர் குமரி மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்டது. நேற்று மாலை களியக்காவிளை எல்லையை அடைந்த சுவாமி விக்கிரகங்களுக்கு பக்தர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் இரவு குழித்துறை மகாதேவர் ஆலயத்தில் சுவாமி விக்கிரகங்கள் தங்க வைக்கப்பட்டன.

இன்று காலை குழித்துறை தாமிரபரணி ஆற்றில் சரஸ்வதி தேவிக்கு ஆராட்டு வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து குழித்துறை மகாதேவர் கோயிலில் இருந்து சுவாமி விக்கிரகங்கள் பாரம்பரிய போலீஸ் அணிவகுப்பு மரியாதையுடன் புறப்பட்டன. இன்று மாலை பத்மநாபபுரம் அரண்மனையை சுவாமி விக்கிரகங்கள் வந்தடைந்தன. அங்கும் பக்தர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையும் நடைபெற்றது. பின்னர் சுவாமி விக்கிரகங்கள் அந்தந்த கோயில்களுக்குச் சென்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE