நாகர்கோவில்: கன்னியாகுமரி பகவதியம்மன் மகாதானபுரத்திற்கு வெள்ளிக்குதிரை வாகனத்தில் சென்று பாணாசூரனை வதம் செய்யும் பரிவேட்டை இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கான ஊர்வலம் முதல் முறையாக யானையின்றி நடைபெற்றதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் புரட்டாசி மாதம் 10 நாட்கள் நவராத்திரி திருவிழா கடந்த 3 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜை, சிறப்பு வழிபாடு, அலங்கார தீபாராதனை, அன்னதானம் மாலையில் சமய உரை அதைத்தொடர்ந்து பல வகையான கலை நிகழ்ச்சிகள், பரதநாட்டியம், இரவில் வாகன பவனி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான பரிவேட்டை திருவிழா 10ம் திருவிழா விஜயதசமியான இன்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அதனைத்தொடர்ந்து காலை 10 மணிக்கு கோயிலின் வெளிப்பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் எலுமிச்சம் பழம் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி குதிரை வாகனத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மதியம் 12.15 மணியளவில் கோயிலில் இருந்து மகாதானபுரம் நோக்கி அம்மனின் பரிவேட்டை ஊர்வலம் பக்தர்கள் புடைசூழ தொடங்கியது.
வெள்ளிக் குதிரை வாகனத்தில் அம்மன் கோயிலை விட்டு வெளியே வரும்போது மன்னர்கால பாரம்பரிய முறைப்படி துப்பாக்கி ஏந்திய போலீசாரின் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர். அதனைத்தொடர்ந்து கன்னியாகுமரி பகவதி அம்மன் பக்தர்கள் சங்கம் சார்பில் கோவிலில் இருந்து புறப்படும் அம்மனின் பரிவேட்டை ஊர்வலத்தில் குதிரை, முத்துக்குடை ஊர்வலம், நாதஸ்வரம், பஞ்ச வாத்தியம், செண்டை மேளம், தேவராட்டம், கோலாட்டம், கேரளா புகழ் தையம் ஆட்டம், சிலம்பாட்டம் ஆகியவை நடைபெற்றன.
» மனைவியுடன் அடிக்கடி பேசியதால் சந்தேகம்: முதியவரை குத்திக் கொலை செய்த காவலாளி கைது
» கேட்பாரற்று புதரில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை - தத்தெடுத்த காவல் உதவி ஆய்வாளர்!
இதுவரை நடைபெற்ற கன்னியாகுமரி பகவதியம்மன் பரிவேட்டை நிகழ்ச்சியில் முதல்முறையாக இன்றைய விழாவில் தான் யானை பங்கேற்கவில்லை. இதனால் பக்தர்கள் பெரும் அதிருப்தி அடைந்தனர். ஊர்வலத்தின்போது யானை வராததை சுட்டிக்காட்டி இந்து அறநிலையத்துறையையும், வனத்துறையையும் குறிப்பிட்டு பக்தர்கள் கோஷமிட்டதால் பரபரப்பு நிலவியது.
பரிவேட்டை ஊர்வலம் மாலையில் மகாதானபுரம் பரிவேட்டை மண்டபத்தை அடைந்தது. அங்கு பகவதி அம்மன் பாணாசுரன் என்ற அரக்கனை அம்புகள் எய்து வதம் செய்து அழிக்கும் பரிவேட்டை நடைபெற்றது. அப்போது அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பகவதியம்மனின் பெயரை உச்சரித்து பக்தி கோஷம் எழுப்பினர். அதனைத் தொடர்ந்து அம்மனின் வாகன பவனி மகாதானபுரம் கிராமம் மற்றும் பஞ்சலிங்கபுரம் பகுதிக்கு வந்தது.
பின்னர் அம்மன் மகாதானபுரம் ரவுண்டானா சந்திப்பு பகுதியில் உள்ள காரியக்கார மடத்தில் சிறிது ஓய்வுக்கு பின் வெள்ளி குதிரை வாக னத்தில் இருந்து வெள்ளி பல்லக்கில் எழுந்தருளி மீண்டும் கன்னியாகுமரி நோக்கி புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு கன்னியாகுமரி வந்தடைந்ததும் அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சியும், அதை தொடர்ந்து ஆண்டின் 5 முக்கிய நாட்கள் மட்டுமே திறக்கும் கிழக்கு வாசல் வழியாக பகவதி அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்வும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.