கொச்சி: கோயில்கள் முதன்மையாக வழிபாட்டு தலங்கள் என்றும், அவை திரைப்பட படப்பிடிப்புகளுக்கான இடமாக இருக்கக் கூடாது என்றும் கேரள உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. கோயில் வளாகத்தில் படப்பிடிப்பை நடத்த அனுமதிப்பது தொடர்பாக மாநில அரசு மற்றும் கொச்சி தேவசம் போர்டு ஆகிய இரு தரப்பிலும் உயர் நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது.
திருப்புனித்துற ஸ்ரீ பூர்ணத்ரயீச ஆலயத்தில் திரைப்பட படப்பிடிப்பு நடத்துவதற்கு வழங்கப்பட்ட அனுமதியை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டது. மதம் சார்பற்ற திரைப்படங்களை கோயில் வளாகத்திற்குள் படமாக்க அனுமதிப்பது சரியானதா என மனுவில் கேள்வி எழுப்பப்பட்டது. இது போன்ற செயல்களால் வழிபாட்டின் புனிதம் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல், கோயிலுக்கு வரும் பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தும் அபாயமும் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. இது பாரம்பரியமாக கோயில்களுக்கான மரியாதையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டது.
கோவில்களில் மத சார்பற்ற படப்பிடிப்பை அனுமதிப்பது இந்து ஆலய விதிகளை மீறுவதாகவும், வழிபாடு மற்றும் பக்தியின் அடிப்படை மதிப்புகளை அச்சுறுத்தும் வணிகமயமாக்கலின் பரந்த போக்கிற்கு உதவுவதாகவும் மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், புனிதமான கோயில்களில் படப்பிடிப்பை அனுமதிப்பது குறித்து மாநில அரசு மற்றும் கொச்சின் தேவசம் போர்டு, சம்பந்தப்பட்ட கோயில் உள்ளிட்ட நிர்வாகக் குழுவிடம் விளக்கம் கேட்டுள்ளது.
» ‘ஆணவம், அதீத நம்பிக்கை’ - ஹரியானா தோல்விக்காக காங்கிரஸை கட்டம் கட்டும் இண்டியா கூட்டணி!