வடலூரில் நடந்த வள்ளலாரின் 202-வது அவதார நாள் விழா: அமைச்சர்கள் பங்கேற்பு!

By க. ரமேஷ்

கடலூர்: கடலூர் மாவட்டம், வடலூரில் வள்ளலாரின் 202-வது அவதார தின விழா இன்று விமர்சையாக கொண்டாடப்பட்டது. அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பி.கே.சேகர்பாபு ஆகியோர் சன்மார்க்க கொடியை ஏற்றிவைத்தனர்.

“வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று கூறிய வள்ளலார் கடலூர் மாவட்டம், மருதூர் கிராமத்தில் 1823-ம் ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி பிறந்தார். அவர் சுத்த சன்மார்க்க சங்கம் என்ற அமைப்பை தொடங்கி அதன் கொள்கைகளைப் பரப்பி வந்தார். மேலும், பசியால் வாடுவோர் உணவருந்திச் செல்வதற்காக வடலூரில் சத்திய ஞான சபையில் தரும சாலையையும் தொடங்கினார்.

தரும சாலையில் அணையா அடுப்பு மூலம் உணவு தயாரிக்கப்பட்டு ஏழை, எளிய ஆதரவற்றோருக்கு இன்றளவும் வழங்கப்பட்டு வருகிறது. அருட்பிரகாச வள்ளலார் பிறந்த 202-வது அவதார தின விழாவை முன்னிட்டு (வருவிக்கவுற்ற நாள்) வடலூர் திரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தில் இன்று காலை 5 மணி முதல் அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் பாடப்பட்டது.

இதில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் கலந்துகொண்டு சத்திய தரும சாலையில் சன்மார்க்க கொடியை ஏற்றி வைத்தனர். இதனைத் தொடர்ந்து சத்திய தர்மசாலையில் அவர்கள் அன்னதானம் வழங்கினர். இதில் வள்ளலார் குறித்த நூல் வெளியிடப்பட்டது. இது போல வள்ளலார் அவதரித்த மருதூர் கிராமத்திலும் சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வுகளில் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், கடலூர் எம்பி-யான விஷ்ணு பிரசாத், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளர் ஸ்ரீதர், இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் ( நிர்வாகம்) சுகுமார், கடலூர் இணை இயக்குநர் பரணிதரன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், மாவட்ட கல்விக்குழு தலைவர் சிவக்குமார், வடலூர் நகர்மன்ற தலைவர் சிவகுமார், வடலூர் நகர திமுக செயலாளர் தமிழ்ச்செல்வன், குறிஞ்சிப்பாடி பேரூராட்சி தலைவர் கோகிலா குமார், வடலூர் தலைமை சமரச சுத்த சன்மார்க்க சங்க மாநில தலைவர் டாக்டர் அருள் நாகலிங்கம், பொதுச்செயலாளர் டாக்டர் வெற்றிவேல், பொருளாளர் நஞ்சுண்டன், மாவட்டத் தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழா ஏற்பாடுகளை வள்ளலார் தெய்வ நிலைய நிர்வாக அதிகாரி ராஜா சரவணக்குமார், தெய்வ நிலைய அறங்காவலர் குழு தலைவர் அழகானந்தன், அறங்காவலர்கள் கனக லட்சுமி, கனகசபை, ஸ்ரீ ராமலு, கிஷோர் ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: “வள்ளலார் பிறந்த தினத்தை காருண்ய தினமாக முதல்வர் அறிவித்துள்ளார்.

வாழும் வள்ளலாராக உள்ள தமிழக முதல்வர், வள்ளலாரின் 200-வது பிறந்த தினத்தை ஆண்டு முழுவதும் கொண்டாடி வள்ளலாருக்கு பெருமை சேர்த்தவர். அதற்காக ரூ.3.6 கோடி நிதி ஒதுக்கி ஆண்டு முழுவதும் அன்னதானம் வழங்கினார். திமுக தேர்தல் அறிக்கையில் வடலூரில் வள்ளலார் வாழ்ந்த இடத்தில் சர்வதேச மையம் அமைக்கப்படும் என உறுதி அளித்திருந்த தமிழக முதல்வர், ஆட்சி பொறுப்புக்கு வந்தவுடன் அத்திட்டத்தை செயல்படுத்தினார். அதற்கு சில இடையூறுகள் ஏற்பட்டன, அந்த இடையூறுகள் நீங்கி மீண்டும் பணி தொடரும் சூழல் ஏற்பட்டுள்ளது” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE