புரட்டாசி சனிக்கிழமை: திருவந்திபுரம் தேவநாதசாமி கோயிலில் 5 ஆயிரம் பேர் முடிக் காணிக்கை செலுத்தி வழிபாடு

By க. ரமேஷ்

கடலூர்: கடலூர் அருகேயுள்ள திருவந்திபுரம் தேவநாதசாமி கோயிலில் புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் முடிக் காணிக்கை செலுத்தி வழிபாடு செய்தனர்.

கடலூர் அருகே உள்ள திருவந்திபுரம் தேவநாதசாமி கோயில் 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்றதாகும். இந்தக் கோயிலுக்கு கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டுச் செல்வார்கள். இந்த நிலையில் புரட்டாசி மாதம் என்பதால் இந்த மாதம் முழுவதும் தினமும் ஏராளமான பொதுமக்கள் முடிக் காணிக்கை செலுத்தி தேவநாத சாமியை தரிசித்து வருகிறார்கள்.

அந்த வகையில் இன்று புரட்டாசி 3-வது சனிக்கிழமை என்பதால் அதிகாலை 3 மணிக்கு இங்கு விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தேவநாதசாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து காலை 5 மணி முதல் பொது மக்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

முன்னதாக அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவந்திபுரம் பகுதியில் திரண்டனர். பின்னர் தங்கள் நேர்த்திக் கடன் செலுத்துவதற்கு சாலக்கரை இலுப்பைத் தோப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூடாரத்தில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் மொட்டை அடித்து முடிக் காணிக்கை செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் கோயில் முன்பாக நீண்ட வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி கடலூரில் இருந்து திருவந்திபுரத்திற்கு இன்று சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. 200-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டி ருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE