மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள தென் திருப்பதி ஸ்ரீவாரி ஆலயத்தில் வருடாந்திர பிரம்மோற்சவம் நிகழ்ச்சி இன்று (அக்.04) மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்ற நிகழ்வையொட்டி மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. கோயில் கொடி மரத்திற்கு முன்பு எழுந்தருளியுள்ள கருடாழ்வாருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, அங்குள்ள தங்க கொடி மரத்திற்கு திருமஞ்சனம், பால், சந்தனம் உள்ளிட்ட நைவேத்தியங்கள் கொண்டு அபிஷேக பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர், கருடாழ்வார் உருவம் பொறித்த கொடிக்கு, வேத விற்பனர்கள் வேத மந்திரங்கள் ஓதி ஆலயத்தை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
அதனைத் தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் மலையப்ப சாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் பல்லக்கில் கோயிலை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். அதைத் தொடர்ந்து, தங்க கொடிமரத்தில் அர்ச்சகர்களின் வேத மந்திரங்கள் முழங்க கருடாழ்வார் கொடி தங்க கொடி மரத்தில் ஏற்றப்பட்டது. அப்போது பக்தர்கள் ‘கோவிந்தா... கோவிந்தா..’ என பக்தி முழக்கங்களை எழுப்பி பெருமாளை வழிபட்டனர்.
இந்த கொடியேற்ற நிகழ்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், கோயில் வளாகத்தில் நவராத்திரி விழாவையும் கொண்டாடும் வகையில் கொலு பொம்மைகளும் வைக்கப்பட்டிருந்தன. அதையும் பொதுமக்கள் பார்வையிட்டனர். அதோடு மாணவ - மாணவிகள் பங்கேற்ற நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
» 3வது மாடியில் இருந்து குதித்த துணை சபாநாயகர்: மகாராஷ்டிரா தலைமை செயலகத்தில் பரபரப்பு!
» சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோயில்: தினமும் 1 டன் பூக்களால் ஆன மலர் மாலைகள் அனுப்பிவைப்பு!