சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோயில்: தினமும் 1 டன் பூக்களால் ஆன மலர் மாலைகள் அனுப்பிவைப்பு!

By பி.டி.ரவிச்சந்திரன்

நிலக்கோட்டை: நவராத்திரி விழாவை முன்னிட்டு கேரள மாநிலம் சோட்டணிக்கரை பகவதியம்மன் கோயிலுக்கு, நிலக்கோட்டையில் இருந்து பக்தர் ஒருவர் தினமும் காணிக்கையாக ஒரு டன் மலர்களால் ஆன பூமாலைகளை அனுப்பி வைக்கிறார்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் இருந்து கேரள மாநிலம் சோட்டானிக்கரையில் உள்ள பகவதி அம்மன் கோயிலுக்கு நவராத்திரி விழாவை முன்னிட்டு ஒரு டன் மலர்களால் கட்டப்பட்ட மலர் மாலைகளை பக்தர் ஒருவர் தினமும் காணிக்கையாக அனுப்பி வருகிறார். நிலக்கோட்டை அருகே கோட்டூர் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் சுகந்த கரிகாலபாண்டியன். இவர், சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஆலயத்தில் நடக்கும் நவராத்திரி திருவிழாவிற்கு ஆண்டுதோறும் பூக்களை காணிக்கையாக வழங்கி வருகிறார்.

நவராத்திரி திருவிழாவின் ஒன்பது நாட்களும், நிலக்கோட்டையில் இருந்து ஒரு டன் அளவிலான பூக்களால் தொடுக்கப்பட்ட மலர் மாலைகள் கேரளாவிற்கு அனுப்பிவைக்கப்படுகிறது. இதற்காக நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் பூக்களை வாங்கி, தனியாக ஆட்களை வைத்து மலர் மாலை தயாரிக்கும் பணிகள் தினமும் நடைபெறுகிறது. தினமும் மலர்மாலைகள் சோட்டானிக்கரை பகவதியம்மன் கோயிலுக்கு வாகனத்தில் அனுப்பிவைக்கப்படுகிறது.

இது குறித்து கூறும் சுகந்த கரிகாலபாண்டியன் கூறுகையில், “கடந்த பத்து வருடங்களாக நவராத்திரி விழாவின் போது சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஆலயத்தை அலங்கரிக்க தினமும் ஒரு டன் பூக்களை கொண்டு மலர் மாலைகள் தயாரித்து அனுப்பிவைக்கிறோம். ஒவ்வொரு நாளும் விதவிதமான பூக்களால் பல்வேறு வடிவங்களில் மாலைகள் தொடுத்து ஆலயத்தை அலங்கரிக்க அனுப்பி வைக்கிறோம்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE