திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயில் தெப்பக் குளக்கரையில் ஆயிரக்கணக்கானோர் முன்னோருக்கு தர்ப்பணம்

By KU BUREAU

திருவள்ளூர்/மாமல்லபுரம்: மகாளய அமாவாசையான நேற்று திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயில் தெப்பக் குளக்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து முன்னோருக்கு தர்ப்பணம் செய்தனர்.

திருவள்ளூரில் உள்ள பழமையான வீரராகவ பெருமாள் கோயில், அஹோபில மடத்தின் பராமரிப்பில் இருந்து வருகிறது. நேற்று மகாளய அமாவாசை என்பதால் நேற்று முன் தினம் இரவே ஆயிரக்கணக்கான பக்தர்கள், சென்னை, திருவள்ளூர், திருத்தணி, காஞ்சிபுரம், அரக்கோணம் உள்ளிட்ட தமிழக பகுதிகள் மட்டுமல்லாமல், ஆந்திரா மாநில பகுதிகளில் இருந்தும் திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயிலுக்கு வந்தனர். அவர்கள் கோயில் வளாகம் மற்றும் தெப்பக் குளக்கரை, பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தங்கி இருந்தனர்.

தொடர்ந்து, அவர்கள் நேற்று காலை நீராடி, வீரராகவ பெருமாள் கோயில் தெப்பக் குளக்கரை மற்றும் காக்களூர் ஏரியில் புனித நீராடி தங்கள் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தனர். பிறகு, வீரராகவ பெருமாள் கோயிலில் நீண்ட வரிசையில் நின்று, சுவாமி தரிசனம் செய்தனர். பிறகு, கண்ணாடி மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய உற்சவர் வீரராகவ பெருமாளை தரிசித்து சென்றனர்.

பெரும்பாலான பக்தர்கள் கார், ஆட்டோ, வேன் போன்ற வாகனங்களில் வந்ததால் திருவள்ளூர் நகரில் நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில் குளங்கள் மற்றும் கடற்கரையில் தர்ப்பணம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோயில் அருகேயுள்ள புண்டரீக புஷ்கரிணி குளக்கரையில் வரிசையில் நின்று பொதுமக்கள் தர்ப்பணம் செய்தனர்.

இதேபோல், கடற்கரையிலும் தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மதுராந்தகம் கோதண்டராமர் கோயில், அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோயில், கூவத்தூர் வாலீஸ்வரர் கோயில், சித்தாமூர், சூணாம்பேடு உட்பட பல்வேறு கோயில், புண்ணிய தீர்த்த குளங்களில், பொதுமக்கள் வரிசையில் நின்று முன்னோருக்கு தர்ப்பணம் செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE