ராமேசுவரம் / திருச்சி / ஈரோடு: மகாளய அமாவாசையையொட்டி ராமேசுவரம், திருச்சி அம்மா மண்டபம், பவானி கூடுதுறையில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
மகாளயம் என்பது புரட்டாசி மாத பவுர்ணமிக்கு மறுநாள் பிரதமை திதியில் தொடங்கி, புரட்டாசி மாத அமாவாசை வரை நீடிக்கும். இந்த அமாவாசையே மகாளய அமாவாசை என்று அழைப்பர். அன்று முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்வதன் மூலம் அவர்களின் நல்லாசியுடன், நன்மைகள் பல கிடைக்கும் என்பது நம்பிக்கை.
மகாளய அமாவாசையை முன்னிட்டு, தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா, தெலங்கானா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் செவ்வாய்க்கிழமை இரவு முதலே ராமேசுவரத்தில் குவிந்தனர். நேற்று அதிகாலை ராமநாத சுவாமி கோயிலில் நடைதிறக்கப்பட்டு ஸ்படிக லிங்க, சாயரட்சை பூஜை, கால பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, அக்னிதீர்த்தக்கடலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி, ரத வீதிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து, கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடி, ராமநாத சுவாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்பாளைத் தரிசனம் செய்தனர்.
பகல் 12 மணியளவில் அக்னி தீர்த்தக் கடற்கரையில் சீதா மற்றும் லட்சுமணருடன் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய ராமர், பக்தர்களுக்கு தீர்த்தவாரி வழங்கி அருள்பாலித்தார். இரவு ராமநாத சுவாமி கோயிலில் நவராத்திரி திருவிழாவுக்கான காப்புக்கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
» மனிதவளத்தை பாதுகாக்க மதுவிலக்கு அவசியம்: விசிக மது ஒழிப்பு மாநாட்டில் திருமாவளவன் ஆவேசம்
அரசுப் போக்குவரத்து கழகம்சார்பில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 150-க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இதையொட்டி, ராமேசுவரத்தில் பல்வேறு சத்திரங்களில் அன்னதானம் நடைபெற்றது.
ஸ்ரீரங்கத்தில்... ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியில் நேற்று அதிகாலை முதலே ஏராளமானோர் திரண்டு, காவிரி ஆற்றில் நீராடி, தங்களது முன்னோர்களை வழிபட்டு, எள், அரிசி, வாழைக்காய், கீரை, காய்கறிகள் உள்ளிட்டவைகளை வைத்து தர்ப்பணம் செய்தனர். வழக்கத்தைவிட இந்த ஆண்டு தர்ப்பணம் செய்ய ஏராளமானோர் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பவானியில் வழிபாடு: தென்னகத்தின் காசி எனப்போற்றப்படும் ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் நேற்றுஆயிரக்கணக்கானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தும், காவிரியில் நீராடியும் வழிபட்டனர். கூடுதுறையில் உள்ள இரு பரிகார மண்டபங்களும் நிரம்பிய நிலையில், காவிரி ஆற்றின் படித்துறை, வழித்தடங்களில் அமர்ந்து பலரும் தர்ப்பணம் செய்தனர். இதையொட்டி, காவிரி ஆற்றில் தீயணைப்புத் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதேபோல, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் நீர்நிலை அருகே லட்சக்கணக்கானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்