இன்று மகாளய அமாவாசை: முன்னோர் ஆராதனையை மறுந்துடாதீங்க!

By KU BUREAU

இன்று அக்டோபர் 2ம் தேதி புரட்டாசி மாத மகாளய பட்ச அமாவாசை நாளில், முன்னோர் ஆராதனையை மறந்துடாதீங்க. இந்தநாளில், முன்னோரை வழிபடுபவர்களின் சந்ததியினருக்கும் அருளாசி வழங்கி அவர்களின் ஆத்ம மகிழ்வில் திளைப்பார்கள்.

அமாவாசை தினம் என்பது நாம் இந்த உலகுக்கு வரக் காரணமாக இருந்த முன்னோர்களை வணங்குவது. அதனால் தான் அமாவாசை தினங்களை முன்னோர்களுக்கான நன்னாள் என்று பித்ரு காரியங்களை அமாவாசை தினத்தன்று செய்கிறோம்.

இந்நாளில், முன்னோர்களுக்கு நாம் செய்கிற ஆராதனைகள் வழிபாடுகள் என அனைத்துமே அவர்களைப் போய்ச் சேரும். இதில் மகிழ்ந்து அந்த ஆத்மாக்கள் நமக்கு அருளாசி வழங்குவார்கள்.

பித்ருக்களை வணங்குவதை, பித்ருக் கடன் என்றே விவரிக்கிறது சாஸ்திரம். கடன் என்றால் கடமை. நம்முடைய இந்த வாழ்க்கையில், நமக்கான மிக முக்கியமான கடமை என்பதே முன்னோர் வழிபாடுதான். வீட்டில் முன்னோர்களின் படங்களுக்கு மலர் சூட்டி வழிபடலாம். தீப தூப ஆராதனைகள் செய்து வழிபடலாம். படையலிட்டு வணங்கலாம். படையல் உணவை முன்னோர்களுக்குப் படைத்துவிட்டு, காகத்துக்கு உணவு வைத்துவிட்டு வேண்டிக் கொள்ளலாம்.

அமாவாசைகளில் தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை முதலானவை மிக மிக முக்கியமான அமாவாசைகளாக சொல்லப்பட்டிருக்கின்றன. இந்த நாளில், நீர்நிலைகளில் நீராடுவது மகா புண்ணியம். அதாவது கடலிலோ நதியிலோ குளத்திலோ நீராடுவதும் நதிக்கரையிலோ குளத்தங்கரையிலோ கடற்கரையிலோ தர்ப்பணம் முதலான காரியங்களைச் செய்வதும் மிகுந்த பலன்களைத் தந்தருளக் கூடியது.

எள்ளும் தண்ணீரும் ‘அர்க்யமாக’க் கொண்டு முன்னோர்களின் பெயர்களை மூன்று முறை சொல்லிவிடுவது, நம் சந்ததிக்குத்தான் பெரும் புண்ணியமாகப் போய்ச் சேரும் என்பது ஐதீகம். நாம் எந்த ஜென்மத்திலோ... தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் அனைத்தும் விலகும் என்பது நம்பிக்கை.

விடுமுறை நாளில் வந்திருக்கும் இந்த மகாளய பட்ச அமாவாசையை, நம் முன்னோர்களுக்காக ஒதுக்கி, ஆத்மார்த்தமாக பித்ரு வழிபாட்டைச் செய்வோம். வளமும் நலமும் பெறுவோம்/

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE