ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் இயேசுவின் திரு இருதய ஆலயத்தில் உள்ள மாதா சிலையின் கையில் உள்ள இருதயத்தில் இருந்து ரத்தம் வழிந்ததை கிறிஸ்தவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வழிபட்டுச் சென்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் நூற்றாண்டு பழமை வாய்ந்த இயேசுவின் திரு இருதய ஆலயம் உள்ளது. கடந்த 2022ம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த ஜான் பிரிட்டோ என்பவர் கனடாவில் இருந்து 2 அடி உயரமுள்ள இருதயம் கையில் தாங்கிய மாத சிலையை வாங்கி வந்து இந்த ஆலயத்திற்கு வழங்கினார். அதில் முதன் முதலாக கனடா நாட்டில் இருந்து இந்தியா கொண்டு வரப்பட்ட இருதயம் தாங்கிய அன்னையின் சுரூபம் என குறிப்பிடப் பட்டுள்ளது.
இந்த சிலைக்கு திரு இருதய அன்பின் சுடர் அன்னை மரியா என பெயரிடப்பட்டு ஆலயத்தினுள் கண்ணாடி பேழைக்குள் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. இன்று காலை 10 மணி அளவில் ஆலயத்திற்கு வந்த பெண் மரியா சிலையை வழிபட்ட போது, மரியாவின் கையில் உள்ள இருதயத்தில் இருந்து ரத்தம் வழிந்து கை சிகப்பு நிறமாக இருப்பதை கண்டு, சர்ச் நிர்வாகிகளுக்கு தகவல் அளித்தார்.
» மகாளய அமாவாசை: ராமேசுவரத்தில் சிறப்பு ஏற்பாடுகள்
» வடபழனி கோயிலில் நவராத்திரி விழா: அக்.3-ம் தேதி முதல் சக்தி கொலு தொடக்கம்
இது குறித்து தகவலறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் ஆலயத்திற்கு வந்து மாதா சிலையில் ரத்தம் போன்ற திரவம் வழிந்ததை ஆச்சரியத்துடன் பார்த்து வழிபட்டுச் சென்ற வண்ணம் உள்ளனர். அந்த சிலையிலிருந்து இந்த சிவப்பு நிற திரவ கசிவுக்கான காரணம் என்ன என்று பொதுமக்கள் ஆச்சர்யம் பொங்க பார்வையிட்டனர்.