1.மெய்ப்பொருள் நாயனார்
சிவனடியார் வேடத்தையே மெய்ப்பொருளாகக் கொண்ட சிற்றரசரான மெய்ப்பொருள் நாயனார், சிவன் கோயில்கள் தோறும் பூஜைகள் நிகழ ஏற்பாடு புரிந்தவர். திருநீற்றில் பற்று கொண்டு ஐந்தெழுத்தை எப்போதும் ஓதி, முப்போதும் ஆலய வழிபாடு செய்தவர் இவர்.
சோழ நாட்டுக்கும் தொண்டை நாட்டுக்கும் இடையே அமைந்துள்ள நடுநாட்டின் தலைநகரமாக திருக்கோவிலூர் விளங்குகிறது. சேதியர் என்ற ஒரு வகையினர் அதிக எண்ணிக்கையில் நடுநாட்டில் வசிப்பதால், இந்நாடு சேதி நாடு என்றும் அழைக்கப்படுகிறது.
தென்பெண்ணை ஆற்றின் தென்கரையில் திருக்கோவிலூர் சிறப்புடன் விளங்கியது. இவ்வூரில் மலாடர் மரபினர் ஆட்சி புரிந்து வந்தனர். இவர்கள் சிவநெறியில் சிறந்து நின்று, அடியார்களின் கருத்து அறிந்து அவர்களுக்கு வேண்டியன செய்து வந்தனர். இவர்களுள் ஒருவராக மெய்ப்பொருள் நாயனார் என்ற சிவனடியார் அவதரித்தார்.
அறநெறி வழுவாது மக்களைக் காத்து அரசாட்சி புரிந்து வந்த இவர் அஞ்சாநெஞ்சராகவும் திகழ்ந்தார். சிவனடியார்களை அல்லும் பகலும் போற்றி வந்தார். தனது செல்வம் அனைத்தையும் சிவத் தொண்டுக்கும், சிவனடியார்களுக்கும் பயன்படுத்தி வந்தார்.
பலசமயம் முத்தநாதன் என்ற அரசன், இவருடன் போரிட்டு தோல்வியடைந்ததால், இவரை பழிவாங்கும் முயற்சியில் ஈடுபட்டான். சூழ்ச்சியால் மட்டுமே மெய்ப்பொருள் நாயனாரை வீழ்த்த முடியும் என்பதை உணர்ந்தான். ஒருநாள் முத்தநாதன் சைவ வேடம் தரித்து, உடல் முழுவதும் திருநீறு பூசிக் கொண்டு கையில் ஓலைக்கட்டு, அதற்கிடையே யாரும் அறியாவண்ணம் கத்தியுடன் போலித் தோற்றம் கொண்டு திருக்கோவிலூர் நகரத்தை அடைந்தான்.
ஊர்மக்களும் முத்தநாதனை உண்மையான சிவனடியார் என்று நினைத்து வணங்கினர். இதனால் மெய்ப்பொருள் நாயனாரின் அரண்மனைக்குள் முத்தநாதன் நுழைவதில் எந்தத் தடையும் ஏற்படவில்லை. நேராக மன்னர் உறங்கிக் கொண்டிருக்கும் இடத்தருகே சென்றான். மெய்க்காப்பாளன் தத்தன் எவ்வளவோ தடுத்தும், கேட்காமல் உள்ளே சென்றான்.
‘சிவாயநம’ என்று குரல் கொடுத்தான் முத்தநாதன். அடியவர் குரல் கேட்டு மன்னர் அகம் மகிழ்ந்தார். திரும்பிப் பார்த்து, தம் எதிரில் சிவனடியார் நிற்பதைக் காண்கிறார். முத்தநாதன் கால்களில் விழுந்து வணங்கினார். சிவனடியார் வந்த காரணம் குறித்து மெய்ப்பொருள் நாயனார் வினவினார்.
பண்டைக் காலத்தில் சிவபெருமான் திருவாய் மலர்ந்தருளிய ஆகம நூல் ஒன்று தம்மிடம் இருப்பதாகவும், அதில் உள்ள தகவல்களை மெய்ப்பொருள் நாயனாருக்கு எடுத்துக் கூறி அவருக்கு மோட்ச பதவியை அளிக்கவே தாம் வந்துள்ளதாகவும் முத்தநாதன் தெரிவித்தான்.
இதுவே பெரும் பேறு என்று மகிழ்ந்த மெய்ப்பொருள் நாயனார், முத்தநாதனுக்கு உயர்ந்த ஆசனத்தை அளித்து தாம் தரையில் அமர்ந்து கொண்டார். சங்கரா, சிவ சிவா என்று இறைவனின் திருநாமத்தை ஓதியபடி, திருவெண்ணீற்றை எடுத்து உடம்பிலும் நெற்றியிலும் பூசிக் கொண்ட முத்தநாதன், அதை மன்னருக்கும் அளித்தான். மன்னரும் திருநீற்றைப் பெற்று நெற்றியில் இட்டுக் கொண்டார்.
மன்னர் சற்றும் எதிர்பாரா வண்ணம், முத்தநாதன் தன்னிடம் இருந்த கத்தியால் மன்னரைத் தாக்கினான். இதைக் கண்ட மெய்க்காப்பாளன் தத்தன் ஓடி வந்து முத்தநாதனை கொல்ல முயன்றபோது, “தத்தா நமர்” என்று கூறி குருதி கொட்ட தரையில் சாய்ந்தார் மன்னர்.
மேலும், “தத்தா.. இவருக்கு எவ்வித இடரும் நேரா வண்ணம் இவரை நம் எல்லையில் விட்டுவிட்டு வருக” என்று மெய்க்காப்பாளருக்கு மன்னர் உத்தரவு பிறப்பித்தார். மெய்க்காப்பாளர் திரும்பி வரும்வரை காத்திருந்த மன்னர் உயிர் துறந்தார். உடனே எம்பெருமான் சக்தி சமேதராக எழுந்தருளினார். மெய்ப்பொருள் நாயனாரும் உயிர்த்தெழுந்தார். அரசியாரும் மெய்க்காப்பாளனும் மகிழ்ந்தனர்.
உயிர் போகும் சமயத்திலும் சிவனடியார்களிடத்தும், வெண்ணீறு அணிந்தவர்களிடத்தும் பக்தி கொண்ட மன்னர், நீண்ட நாட்கள் சிவத்தொண்டு புரிந்து ஈசன் திருவடி நிழலில் இளைப்பாறினார்.
‘வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக்கு அடியேன்’
2.ஏனாதிநாத நாயனார்
திருநீறு புனைந்தவர் யாவரேயாயினும் சிவமாக பாவித்து வணங்கும் ஏனாதிநாத நாயனார், அரசர்கள் வெற்றி பெற அவர்களுக்கு வாள்பயிற்சி அளித்து வந்தார். சிவனடியார் தொண்டில் அதிக ஈடுபாடு கொண்டு, சைவம் தழைக்கச் செய்தவர் இவர்.
சோழ வளநாட்டில் அனைத்து வளங்களிலும் சிறந்ததாக எயினனூர் என்ற சிற்றூர் விளங்கியது. ஈழவர் குலச் சான்றோர் மரபில் அவதரித்த ஏனாதிநாதர் என்ற சிவனடியார் திருவெண்ணீற்று பக்தியில் திளைத்து, சிவனடியார்களுக்கு சேவை புரிந்து வந்தார். பகைவர் மேனியில் திருவெண்ணீற்றின் ஒளியைக் கண்டுவிட்டால் உடனே பகைமையை மறந்து அவருடன் நட்பு பாராட்டி, அவரை வணங்கி வழிபடுவார்.
சோழ மன்னர் படையில் சேனாதிபதியாக இருந்தவர்களின் சந்ததியில் தோன்றிய ஏனாதிநாதர் வாள்பயிற்சிப் பள்ளி நடத்தி வந்தார். அதில் எண்ணற்றோர் பயிற்சி பெற்று வந்தனர். அதில் கிடைத்த வருவாய் அனைத்தையும் சிவனடியார்களுக்கே செலவிட்டு வந்தார் ஏனாதிநாதர்.
அதிசூரன் என்பவனும் அவ்வூரில் வாள்பயிற்சிக் கூடம் நடத்தி வந்தான். தொழில் நுட்பத்தில் ஏனாதிநாதரைவிட மிகக் குறைந்தவன் என்பதால், அதிசூரனிடம் பயிற்சி பெற வந்த மாணவர்கள் ஒவ்வொருவராக விலகத் தொடங்கினர். இதனால் அதிசூரனுக்கு வருவாய் குறைந்தது. ஒருநாள் ஏனாதிநாதர் நடத்தி வந்த பயிற்சிக் கூடத்துக்கு, தனது போர் வீரர்களுடன் சென்ற அதிசூரன், ‘எதற்காக ஒரே ஊரில் 2 வாள்பயிற்சிக் கூடங்கள்?’ என்று வாக்குவாதம் செய்து அவரை போருக்கு அழைத்தான். போரில் அதிசூரன் தோல்வி அடைந்தான்.
மற்றொரு சந்தர்ப்பத்தில் தனது ஏவலாளன் ஒருவனை அழைத்த அதிசூரன், அவனை ஏனாதிநாதரிடம் சென்று தனியொரு இடத்தில் தனித்து போர் புரியலாம் என்று கூறச் சொன்னார். அதற்கு ஏனாதிநாதர் உடன்பட்டு, குறிப்பிட்ட இடத்துக்கு குறித்த நாளில் போருக்குச் சென்றார். தனக்கு ஆபத்து என்று தெரிந்ததும், அதிசூரன் தான் அணிந்திருந்த உடற்கவசம் மற்றும் முகமுடியைக் கழற்றினான். அவன் உடல் முழுவதும் திருநீறு, நெற்றியில் திருநீறு அணிந்திருந்தான். அவனது கோலத்தைக் கண்டதும் திடுக்கிட்ட ஏனாதிநாதர், போரிடுவதை நிறுத்தினார். இதுதான் சமயம் என்று அதிசூரன் அவரை மாய்த்தான். ஏனாதிநாதர் உயிர் துறந்தார். உடனே ஒரு பேரொளி தோன்றியது. எம்பெருமான் உமையாளுடன் காட்சியருளி ஏனாதிநாதரை உயிர்த்தெழச் செய்தார். பகைவனது வாளால் உலகப் பற்று, பாசம், பந்தம் ஆகிய அனைத்து தொடர்புகளையும் அறுத்துக் கொண்ட ஏனாதிநாதருக்கு தன்னைவிட்டுப் பிரியாது இருக்கும் பெருவாழ்வை ஈசன் அளித்தார். ‘ஏனாதி நாதன்றன் அடியார்க்கும் அடியேன்’