ராமேசுவரம்: ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலின் பிரதான "கோடி தீர்த்தம்" கடைகளில் விற்பனை செய்வதை இந்து சமய அறநிலையத் துறை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
ராமேசுவரம் ராமநாத சுவாமி திருக்கோயிலுக்குள் மகா லட்சுமி தீர்த்தம், கெந்தமாதன தீர்த்தம், சாவித்திரி தீர்த்தம், பிரமஹத்தி விமோசன தீர்த்தம், காயத்திரி தீர்த்தம், கங்கா தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், யமுனா தீர்த்தம், சங்கு தீர்த்தம், கயா தீர்த்தம், சக்கர தீர்த்தம், சர்வ தீர்த்தம், சேது மாதவ தீர்த்தம், சிவ தீர்த்தம், நள தீர்த்தம், சாத்யாமமிர்த தீர்த்தம், நீல தீர்த்தம், சூரிய தீர்த்தம், கவய தீர்த்தம், சந்திர தீர்த்தம், கவாட்ச தீர்த்தம், கோடி தீர்த்தம் என 22 புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன.
இந்த தீர்த்தங்களில் தீர்த்தமாடுவதன் மூலம் முன்னோர்களின் நல்லாசியுடன் சிறந்த வாழ்க்கைத் துணையும், கல்வி கேள்விகளில் சிறந்த குழந்தைகள், வீடு, விளை நிலம், பசுக்கள், தொழில் அபி விருத்தி, ஆரோக்கியம், தீர்க்காயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. குறிப்பாக, 22-வது தீர்த்தமான கோடி தீர்த்தத்தில் நீராடியதன் மூலம் அனைத்து தீர்த்தங்களையும் நீராடிய புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் ராமநாதசுவாமி தேவஸ்தானம் சார்பாக பல ஆண்டுகளுக்கு முன்பாகவே 1/2 லிட்டர் கோடி தீர்த்தம் ரூ. 20க்கு பாட்டிலில் விற்பனை துவங்கப் பட்டது.
பக்தர்கள் கோடி தீர்த்தத்தை வாங்கிச் சென்று தங்களின் வீடு, கடை, தொழில், வர்த்தக நிறுவனங்களில் பூஜை உள்ளிட்ட புனித காரியங்களுக்கு பயன்படுத்துகின்றனர். சில கோயில் நிர்வாகங்கள் மொத்தமாக வாங்கி பூஜைகளுக்காகவும் பயன்படுத்துவார்கள். ஆனால் தற்போது கோயில் நிர்வாகம் முன்னறிவிப்பு இன்றி கோடி தீர்த்தம் விற்பனையை அடிக்கடி நிறுத்தி விடுகின்றனர். இதனால் பெரும்பாலான பக்தர்கள் தீர்த்தம் கிடைக்காமல் ஏமாற்றம் அடைகின்றனர்.
தீர்த்தம் தட்டுப்பாட்டினை பயன்படுத்தி ராமேசுவரத்தில் சில கடைகளில் கோடி தீர்த்தத்தை மொத்தமாக பாட்டில்களில் அடைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர். எனவே, ராமேசுவரத்தில் தனியார் கடைகளில் கோடி தீர்த்தம் விற்பனையை தடுத்து, ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்களுக்கு பரவலாக கோடி தீர்த்தம் கிடைப்பதற்கு இந்து சமய அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.