2024 ஆண்டின் முதல் ஹஜ் பயணம்; சென்னையில் இருந்து புறப்பட்ட 326 பயணிகள்!

By கே.காமராஜ்

சென்னையில் இருந்து 326 பயணிகளுடன் முதல் ஹஜ் விமானம் சவூதி அரேபியா புறப்பட்டு சென்ற நிலையில், அவர்களை தமிழ்நாடு சிறுபான்மையினர் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழியனுப்பி வைத்தார்.

இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்று புனித ஹஜ் பயணம் ஆகும். துல் ஹஜ் மாதத்தில் இந்த கடமையை நிறைவேற்ற இஸ்லாமியர்கள் சவூதி அரேபியாவில் உள்ள மெக்கா நகருக்கு செல்வார்கள். நடப்பு ஆண்டிற்கான புனித ஹஜ் பயணத்திற்காக முதல் ஹஜ் விமானம் சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சவூதி அரேபியா ஜித்தா நகருக்கு புறப்பட்டது.

ஹஜ் பயணத்திற்காக சென்னை விமான நிலையத்தில் குவிந்துள்ள பயணிகள்

இந்த விமானத்தில் 170 பெண்கள் உள்பட 326 பேர் பயணித்தனர். புனிதப் பயணம் செல்பவர்களை தமிழ்நாடு சிறுபான்மையினர் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அப்துல் சமது எம்எல்ஏ, ஹஜ் கமிட்டி செயலாளர் ஏம்.ஏ. சித்திக், பிற்படுத்தப்பட்டோர் நல துறை செயலாளர் ரீட்டா ஹாரீஸ் தக்கார், சிறுபான்மை ஆணைய துணை தலைவர் இறையன்பு குத்துஸ் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.

அமைச்சர் செஞ்சி மஸ்தான், எம்எல்ஏ சமது ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான், “சென்னையில் இருந்து தமிழகத்தை சேர்ந்த 5,470, புதுச்சேரியை சேர்ந்த 61, அந்தமான்- நிக்கோபர் தீவை சேர்ந்த 131 உள்பட 5,688 பேர் 17 விமானங்களில் புனிதப் பயணம் செய்கின்றனர். தமிழ்நாட்டை சேர்ந்த 276 பேர் பெங்களூரூ, மும்பை, ஹைதராபாத், கொச்சி, கோழிக்கோடு விமான நிலையங்களில் இருந்து புறப்பட்டு செல்கின்றனர்.” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE