திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்... சாமி தரிசனத்திற்காக 3 மணி நேரத்திற்கும் மேல் காத்திருப்பு!

By கே.காமராஜ்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விடுமுறை தினம் என்பதால் சாமி தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள், சுமார் 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் தலமாகவும் விளங்கக்கூடிய அண்ணாமலையார் திருக்கோயில். அண்ணாமலையார் கோயிலில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு ஆகம விதிப்படி நடை திறக்கப்பட்டு உண்ணாமுலை அம்மன் உடனாகிய அண்ணாமலையாருக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்தனர்.

பக்தர்கள் 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்

அதனைத் தொடர்ந்து அதிகாலை முதல் பக்தர்கள் கிழக்கு திசையில் அமைந்துள்ள ராஜகோபுரம் நுழைவு வாயில் வழியாக வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து, சாமி தரிசனம் செய்துவிட்டு பின்னர் திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியே செல்கின்றனர். அண்ணாமலையார் திருக்கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் அமைந்துள்ள பெரிய நாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து மலர் மாலை அணிவித்து மகா தீபாராதனை நடைபெற்றது. வழக்கமாக அண்ணாமலையார் கோயிலில் சனி மற்றும் ஞாயிறு மட்டுமில்லாமல் விடுமுறை தினங்களில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் அதிக அளவில் வருகை புரிந்து வருகின்றனர்.

உண்ணாமுலை அம்மன் உடனமர் அண்ணமலையார்

தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும், முகூர்த்த தினம் என்பதாலும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. அதே போன்று ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநில பக்தர்களும் அண்ணாமலையார் கோயிலுக்கு அதிக அளவு வருகை புரிந்ததால் கூட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக இன்று அதிகாலையிலிருந்து நீண்ட வரிசையில் தரையில் அமர்ந்து காத்திருந்த பக்தர்கள் 3 மணி நேரத்திற்கு பிறகு அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். வெயிலில் பக்தர்கள் கால் சுடாதவாறு கோயில் வளாகம் முழுவதும் தேங்காய் நாற் விரிப்புகள் போடப்பட்டுள்ளது. காத்திருக்கும் பக்தர்களுக்கு கோயில் சார்பாக நீர்மோர் மற்றும் குடிநீர் வழங்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE