சிவனருள் பெற்ற அடியார்கள் – 26

By கே.சுந்தரராமன்

சோழ நாட்டில் அவதரித்த கோச்செங்கர், 70-க்கும் மேற்பட்ட சிவன் கோயில்களைக் கட்டி சைவ நெறி தழைத்தோங்கச் செய்தவர். அடியார் தொண்டில் அதிக ஈடுபாடு கொண்ட இவர், அடியார்களுக்குத் தேவையானவற்றை செய்து கொடுப்பதில் தீவிரம் காட்டி வந்தார்.

கோச் செங்கட் சோழ நாயனார்

சோழ நாடு எப்போதும் வளம்மிக்க நாடாக இருந்து வந்தது. காவிரி நதி வற்றாது ஓடியதால், இப்பகுதிகள் செழிப்படைந்து, அடர்வனம், பூஞ்சோலைகள் நிறைந்து காணப்பட்டன. தெய்வீகத் தலமாக திருவானைக்காவலில் காவிரி கரைபுரண்டு ஓடியது.

காவிரியாற்றங்கரையில் சந்தரதீர்த்தம் என்ற பெயரைத் தாங்கி பொய்கை அமைந்திருந்தது. அங்குள்ள சோலையில் நாவல் மரத்தடியில் இருந்த சிவலிங்கத்துக்கு, வெள்ளை யானை ஒன்று தினமும் பூஜை செய்து வந்தது. தனது துதிக்கையால் நீரும், மலரும் கொணர்ந்து சிவலிங்கத்துக்கு அபிஷேக அர்ச்சனைகள் செய்து வந்தது அந்த யானை. இச்செயலை ஒட்டியே இவ்வூருக்கு திருவானைக்காவல் என்ற பெயர் கிட்டியது.

நாவல் மரத்தின் மீதிருந்த சிலந்தி, சிவலிங்கத்தின் மீது சூரிய வெப்பம் படாமல் இருப்பதற்கும், சருகுகள் உதிர்ந்து விழாமல் இருப்பதற்கும், நூல் பந்தல் ஒன்றை அமைத்தது. வழக்கம்போல் சிவலிங்கத்தை வழிபட வரும் வெள்ளை யானை, சிலந்தியின் செயலைக் கண்டு கோபம் கொண்டது. தூய்மையற்ற குற்றச் செயலை சிலந்தி செய்வதாக எண்ணி வருந்தியது. உடனே நூல்பந்தலை சிதைத்த வெள்ளை யானை, தனது வழக்கமான வழிபாட்டை செய்தது.

யானையின் செயலைக் கண்டு கோபமுற்ற சிலந்தி, யானை செல்லும் வரை காத்திருந்தது. யானை சென்றதும், மீண்டும் முன்புபோல் நூல்பந்தலிட்டது. இதுபோல் யானை, சிலந்தியின் நூற்பந்தலை சிதைப்பதும், சிலந்தி மீண்டும் நூற்பந்தல் அமைப்பதும் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

ஒருநாள் சிலந்தி, பொறுமையிழந்து, யானையை அழிக்க எண்ணியது. அன்றைய தினம், சிவலிங்கத்தை வழிபட வந்த யானையின் துதிக்கையில் சிலந்தி புகுந்து கடித்தது. சிலந்தியின் செயலால் கோபமடைந்த யானை, தனது துதிக்கையை ஓங்கி வேகமாக நிலத்தில் அடித்தது. இதில் சிலந்தி உயிரிழந்தது. அதே நேரத்தில், சிலந்தியின் விஷம் தாங்காமல் யானையும் நிலத்தில் விழுந்து உயிரிழந்தது.

அகிலாண்டேஸ்வரி

(கைலாய மலையில் சிவகணங்கள் புட்பதந்தன், மாலியவான் ஆகிய இருவரும், சிவத்தொண்டில் தானே சிறந்தவன் என்று கூறிக்கொண்டு, ஒருவருக்கொருவர் பொறாமையும், கோபமும் கொண்டனர். இதைத் தொடர்ந்து புட்பதந்தன் மாலியவானை சிலந்தியாக பிறக்குமாறு சபிக்கிறான். மாலியவான் புட்பதந்தனை யானையாக பிறக்குமாறு சபிக்கிறான்.)

இவ்வாறு யானையாகவும், சிலந்தியாகவும் பிறந்த சிவகணங்கள் இருவரும் வீடுபேற்றை அடைந்தனர். யானைக்கு சிவப்பதம் அளித்த சிவபெருமான், சிலந்தியை சோழர் குலத்தில் பிறக்கச் செய்து, கோயில்கள் அமைத்து சிவத்தொண்டு புரிய அருள் செய்தார். (யானையைக் கொல்ல சிலந்தி முதலில் முயற்சி செய்ததால், அதற்கு மட்டும் மறுபிறப்பு ஏற்பட்டது)

சோழ அரசரான சுபவேதர், கமலவதியாருடன் நல்லாட்சி புரிந்து வந்தார். நெடுநாட்களாக இத்தம்பதிக்கு குழந்தைப் பேறு கிட்டவில்லை. இதைத் தொடர்ந்து இருவரும் தில்லை சென்று அம்பலவாணரை வணங்கி தவம் மேற்கொண்டனர். கூத்தப் பெருமானின் அருளால் சிலந்தி கமலவதியாரின் வயிற்றில் கருவாக உருவானது. குழந்தை அவதரிக்கும் நேரத்தில் ஜோதிட வல்லுநர்கள், ஒரு நாழிகை (24 நிமிடங்கள்) கழித்து குழந்தை பிறந்தால், மூவுலகையும் ஆளக் கூடிய ஆற்றலைப் பெறக்கூடிய குழந்தையாக இருக்கும் என்று ஆலோசனை வழங்கினர்.

திருவானைக்காவல்

ஜோதிடரின் ஆலோசனையை ஏற்ற அரசியார், ஒரு நாழிகை கழித்து தனக்கு குழந்தை பிறந்தால் போதும் என்று கூறி, குழந்தைப் பிறப்பை தாமதிக்க, தன்னை தலைகீழாகக் கட்டி தொங்க விடுமாறு கட்டளையிடுகிறார். அதன்படி பணியாளர்களும் அரசியாரை தலைகீழாகக் கட்டி தொங்கவிடுகின்றனர். ஜோதிடர் கணித்த நேரத்தில் அரசியாரின் கட்டை அவிழ்த்தனர். அரசியாருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

அரசியார் தலைகீழாக தொங்கியதால், குழந்தையின் கண்கள் சிறிது நேரம் சிவந்து காணப்பட்டன. அரசியார் குழந்தையை உச்சிமோந்து, ‘என் செல்வக் கோச் செங்கணான்’ என்று அழைக்க, அப்பெயரே குழந்தைக்கு நிலைத்துவிட்டது. குழந்தை பிறந்த சற்று நேரத்துக்கெல்லாம் அரசியார் இறைவனடி சேர்ந்தார்.

(தாங்க முடியாத பிரசவ வலியுடன், தலைகீழாக தன்னை தொங்கவிடச் செய்வது, தன்னுடைய உயிருக்கு ஆபத்தாக முடியும் என்பதை அறிந்தும், தன் மகனுடைய சிறப்பை எண்ணி அனைத்தையும் பொறுத்துக் கொண்ட கமலவதியாரின் தாயன்பு, இதன்மூலம் அறியப்படுகிறது.)

சுபதேவர் தன் மகனை, வில் வித்தையில் வல்லவனாக்கி, வேத ஆகமங்களிலும் மேம்பட்டவனாக்கினார். உரிய பருவத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்க மகனை தயார்படுத்தினார். கோச் செங்கணானுக்கு முடிசூட்டு விழா நடைபெற்றது. இதைத் தொடர்ந்து சுபதேவர் கானகம் சென்று அருந்தவம் புரிந்தார். சில காலம் கழித்து எம்பெருமான் நிழலில் இளைப்பாறினார்.

சிவபெருமானின் அருளால், தனது முற்பிறப்பு குறித்து அறிந்துகொண்ட கோச் செங்கட் சோழர், சிவபெருமானுக்கு கோயில்கள் எழுப்ப தம்மை அர்ப்பணித்துக் கொண்டார். திருவானைக்காவலில் யானை நுழையாதபடி சிறு வாயிலுடன் (அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர்) கோயில் எழுப்பினார். 70 சிவன் கோயில்கள், 3 பெருமாள் கோயில்கள் எழுப்பி தினப்படி பூஜைக்குத் தேவையான அமுதுபடி முதலானவற்றுக்கு ஏற்பாடுகள் செய்து இறைவனுக்கு தொண்டாற்றியுள்ளார்.

நிறைவாக தில்லை தலத்தில் தங்கி, தில்லையம்பலத்து ஆடுகின்ற கூத்தபிரானை முக்காலமும் முறையோடு வழிபட்டார். தில்லைவாழ் அந்தணர்களுக்கு திருமாளிகைகள் கட்டுவித்து, பல திருப்பணிகள் செய்து தில்லை அம்பலவாணரின் பாத கமலங்களில் சரண் புகுந்து பேரின்பப் பெருவாழ்வு அடைந்தார்.

‘உலகாண்ட செங்கணார்க்கும் அடியேன்’

முத்தைய அத்தியாயத்தை வாசிக்க...

சிவனருள் பெற்ற அடியார்கள் – 25

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE