சிவனருள் பெற்ற அடியார்கள் – 25

By கே.சுந்தரராமன்

குலத்தைக் காத்ததால் குலச்சிறையார் என்ற பெயர் பெற்ற சிவனடியார், அடியார் தொண்டில் ஈடுபட்டவர். ஈசனின் அருள் பெற அடிப்படையான காரணமாக உள்ளவர்கள் சிவனடியார்களே என்ற எண்ணம் கொண்டு அவர்களுக்கு வேண்டிய உதவிகள் புரிந்தவர்.

ஜகத்ரட்சகி

முத்தும், முத்தமிழும், சந்தனமும், செந்தண்மையும் கொண்டது பாண்டிய நாடு. பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இந்நாட்டில் உள்ள மணமேல்குடி நகரில் சிவபெருமானை வணங்கும் சைவ சமயத்தைச் சேர்ந்த அடியார்கள் பலர் வசித்து வந்தனர். அவர்களுள் ஒருவராக வளர்ந்த குலச்சிறையார் என்ற அடியார் கல்வி, கேள்விகளில் முதன்மையானவராக இருந்தார்.

இளம் வயது முதலே குலச்சிறையார், சிவபெருமானின் திருவடி கமலங்களைப் போற்றி, சிவனடியார்களுக்கு தொண்டு புரிவதில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். சிவத் தொண்டர்களின் திருவடியே பேரின்ப வீடுபேற்றுக்கு வழிகாட்டும் என்பதில் உறுதியாக இருந்த குலச்சிறையார், தம்மை நாடி வரும் சிவனடியார்கள் யாராக இருந்தாலும் எக்குலத்தவராயினும் வேற்றுமை பாராது, சிவமாகவே கருதி வழிபட்டு வந்தார்.

குலச்சிறையார், சிவனடியார்களின் பாதம் பணிந்து, அவர்களிடம் இன்மொழி பேசி, இன்னமுது அளிப்பார். திருநீறு, உருத்திராக்கம், கோவணம் என சிவ சாதனங்களைத் தரித்து பஞ்சாக்கரம் ஓதும் நியதி கொண்ட அடியார்களைப் போற்றி வணங்கி வந்தார் அவர். இறைவனுக்கு செய்யும் வழிபாடு ஆராதனை எனவும், அடியவருக்கு செய்யும் வழிபாடு சமாராதனை எனவும் கூறப்படும்.

குலச்சிறையார்

மதுரையை ஆட்சிபுரிந்து வந்த நின்றசீர் நெடுமாறனிடம் தலைமை அமைச்சராக பணியாற்றி வந்த குலச்சிறையார், சைவ சமயத்தை பரப்புவதில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். உயிரை வளர்த்து பக்தியைப் பெருக்கும் சமய ஞானம் அனைத்து நலங்களுக்கும் ஆணிவேர் போல் விளங்குகிறது என்று தனது உறவினர்களிடம் அடிக்கடி சொல்வார் குலச்சிறையார்.

உடலை வளர்ப்பது உணவு. உணர்வை வளர்ப்பது கல்வி. உயிரை வளர்ப்பது சமயம். உயிர் இல்லை என்றால் உணர்வும், உடலும் சிறப்புப் பெறாது. சமய ஞானம் இல்லாத கல்வியும் உலக வாழ்வும் சிறப்படையாது. உடலை வளர்ப்பது தேச பக்தி. உணர்வை வளர்ப்பது குரு பக்தி. உயிரை வளர்ப்பது சிவபக்தி என்பதற்கு ஏற்ப குலச்சிறையார், சிவபக்தியில் திளைத்திருந்தார்.

பகைவர்களை வென்று அரசுக்கு பேருதவி புரிந்து வந்த குலச்சிறையார், இடையறாது இறைவனது திருவடிகளை செந்தமிழ்ப் பாடல்களால் துதி செய்து மகிழ்ந்தார். பாண்டிய நாட்டில் சமணர்களின் ஆதிக்கம் தழைத்தோங்குவதைக் கண்டு வெகுண்ட குலச்சிறையார், சைவ சமயத்தின் கொள்கைகளை தீவிரமாகக் கடைபிடித்து அச்சமயத்தின் பெருமைகளை அனைவரிடமும் கூறிவந்தார். பயிரை வளர்த்தால் மட்டும் போதாது, பயிரை அழிக்க முற்படும் கோரைப் புற்களைக் களைவதும் மிகவும் அவசியமானதாகும். அதேபோல சைவ சமயத்தைக் காக்கும் பொருட்டு, அதற்கு இடையூறாக வந்த பலரையும் வாதப் போரில் வெற்றி கண்டார் குலச்சிறையார்.

பாண்டிமாதேவி என்றழைக்கப்படும் மங்கையர்க்கரசியின் சிறந்த திருத்தொண்டுக்கு உண்மையான தொண்டராகி நின்றார். திருஞான சம்பந்தரை மதுரைக்கு எழுந்தருளச் செய்து, சைவ சமயத்தின் கொள்கையை அனைவரும் உணரும்படி செய்ய முயற்சிகளை மேற்கொண்டார்.

சமணருடைய பொய்ம்மைகளைக் களைந்து, பாண்டி நாட்டில் திருநீற்றின் பெருமைகளை அனைவரிடமும் உரைத்து, நிலைபெற்ற சீகாழிப் பிள்ளையாரின் திருவடிகளை வணங்கி, அவருடன் இணைந்து அனல்வாது, புனல்வாது செய்து, சமணர்களை வெற்றி கொண்டார் குலச்சிறையார்.

மணமேல்குடி கோயில்

குலச்சிறையாரின் பெருமைகளை உணர்ந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள், ‘பெருநம்பி குலச்சிறையார்’ என்று தனது பதிகங்களில் போற்றிப் பாடினார். ஒட்டக்கூத்தரும் குலச்சிறையாரைப் புகழ்ந்து பாடியுள்ளார்.

சிவநாமத்தை சித்தத்தில் பதிய வைத்து, சைவ நெறியை அனைவரும் உணரும்படி செய்த குலச்சிறையார், ஈசனின் பாதக்கமலங்களைப் பற்றி வாழும் பேரின்பத்தைப் பெற்றார்.

(மணமேல்குடி திருத்தலம் ஆவுடையார் கோயிலில் இருந்து தென்கிழக்கில் மணசாலை வழியாக 25 கிமீ தொலைவில் உள்ளது. திருப்புனவாயிலில் இருந்து வடகிழக்கில் 13 கி.மீ தொலைவில் உள்ள மீமீசல் சென்று அங்கிருந்து வடகிழக்கில் 10 கிமீ சென்றும் மணமேல்குடியை அடையலாம். மணமேல்குடி ஜகதீஸ்வரர் – ஜகத்ரட்சகி கோயிலில் சம்பந்தர், கூன் பாண்டியன், குலச்சிறையார், மங்கையர்க்கரசி ஆகியோர் தனிசந்நிதியில் அருள்பாலிக்கின்றனர்.)

‘பெரு நம்பிகுலச்சிறை தன் அடியார்க்கும் அடியேன்’

**

5.மங்கையர்க்கரசியார்

சோழ மன்னரின் மகளாகப் பிறந்து பாண்டிய மன்னரின் பட்டத்தரசியான மானி, மங்கையர் அனைவருக்கும் தலைவியாகும் பேறு பெற்றதால், மங்கையர்க்கரசி என்ற சிறப்புப் பெயர் பெற்றார். அடியார் தொண்டே ஈசனின் அருள் பெற சிறந்த வழி என்பதை உணர்ந்து சைவ நெறியை தழைக்கச் செய்தவர் மங்கையர்கரசியார்.

மங்கையர்க்கரசி

மதுரை மன்னர், கூன் பாண்டியன், நின்றசீர் நெடுமாறன் என்று அழைக்கப்படும் பாண்டிய மன்னரை மணந்த மங்கையர்க்கரசி, சைவ சமயம் தழைக்க வேண்டும் என்று உறுதிகொண்டவர். சிறுவயது முதலே ஈசன் திருவடிகளில் மிகுந்த பற்றுகொண்டு வாழ்ந்த இவர், திருநீற்றின் மகிமை உணர்ந்து, அடியார் வழிபாட்டில் ஈடுபட்டு வந்தார்.

பாண்டிய நாட்டில் பரவி வந்த சமணக் கொள்கை மீது உடன்பாடு இல்லாதவராக இருந்தார். சைவ சமயத்தை பரப்ப பெரு முயற்சிகளை மேற்கொண்டார். திருஞான சம்பந்தரை பாண்டிய நாட்டுக்கு எழுந்தருளச் செய்து, சமண சமயத்தைப் பின்பற்றி வந்த தனது கணவர் நின்ற சீர் நெடுமாற நாயனாரை சைவ சமயத்துக்கு மாற்றினார்.|

மங்கையர்கரசியார், சைவ சமயத்துக்கு ஆற்றி வந்த அருந்தொண்டை, சேக்கிழார் சுவாமிகள் புகழ்ந்து சிறப்பித்துள்ளார். இவர் நீண்ட காலம் கணவர் நின்றசீர் நெடுமாற நாயனாருடன் இணைந்து சிவத்தொண்டு புரிந்து ஈசன் திருவடி நிழலில் இளைப்பாறினார்.

(பாண்டி நாடு சமண சமயத்தைச் சார்ந்து இருந்தபோது, சைவத்தில் நிலைத்து நின்றது ஆணில் ஒருவரும், பெண்ணில் ஒருத்தியுமே என்று கூறப்படும். ஆணில் ஒருவர் குலச்சிறையார். பெண்ணில் ஒருவர் மங்கையர்க்கரசியார்.)

‘வரிவளையால் மானிக்கும் அடியேன்’

முந்தைய அத்தியாயத்தை வாசிக்க...

சிவனருள் பெற்ற அடியார்கள் – 24

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE