ஹைதராபாத்தில் சதுர்த்தியை முன்னிட்டு 12 கிலோ எடையுள்ள விநாயகர் லட்டு 1.25 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சதுர்த்தி கடைசி நாளில் விநாயகர் லட்டு ஏலம் விடப்படுவது வழக்கம். இந்த லட்டுவை வாங்குபவர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைப்பதுடன் ஆரோக்கியம், செல்வச் செழிப்பு கிட்டும் என பக்தர்கள் நம்புகிறார்கள்.
கொய்யாலகுடத்தில் சீதாராமஞ்சநேய விநாயகர் உற்சவ கமிட்டி சார்பில் நடைபெற்ற ஏலத்தில் 12 கிலோ எடையுள்ள சன் சிட்டி கணேஷ் லட்டு 1.25 கோடி ரூபாய்க்கு இன்று ஏலம் போய் சாதனை படைத்தது. கடந்த ஆண்டு, சுமார் 65 லட்ச ரூபாய்க்கு லட்டு ஏலம் போனது. ஆனால், இந்த முறை அதன் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது.
பலாபூர் கணேஷ் லட்டு 27 லட்ச ரூபாய்க்கும், மற்றொரு விநாயகர் லட்டு 1,02,116 ரூபாய்க்கும் ஏலம் போனது. அத்துடன் விநாயகர் சிலைக்கு சாத்தப்பட்ட சால்வை ஒன்றை 25,116 ரூபாய்க்கு பக்தர் ஒருவர் ஏலத்தில் எடுத்தார். இந்த நிகழ்வின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.