கூடலழகர் கோயில் வைகாசி பெருந்திருவிழா: வைகை ஆற்றில் இறங்கிய வியூக சுந்தரராஜ பெருமாள்

By சுப.ஜனநாயகச்செல்வம்

மதுரை: மதுரை கூடலழகர் கோயில் வைகாசி பெருந்திருவிழாவின் 11-ம் நாளான இன்று தங்கக்குதிரை வாகனத்தில் புறப்பட்ட வியூக சுந்தரராஜ பெருமாள், வைகை ஆற்றில் இறங்கினார். பின்னர் ஆழ்வார்புரத்திலுள்ள ராமராயர் மண்டகப்படியில் எழுந்தருளினார். இங்கு இரவு தொடங்கி விடிய, விடிய தசாவதாரம் நடைபெறும்.

மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்று. பெரியாழ்வார் பல்லாண்டு பாடிய தலம். திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற சிறப்புக்குரிய தலம் இதுவாகும்.

இக்கோயிலில் வைகாசி பெருந்திருவிழா மே 16-ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனையொட்டி தினமும் காலையில் பல்லக்கிலும், மாலையில் சிம்மம், அனுமார் வாகனம், கருடன், சேஷ வாகனம், யானை, பூச்சப்பரம், குதிரை வாகனங்களில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 9-வது நாளில் தேரோட்டம் நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷங்கள் முழங்க வடம் பிடித்து இழுத்தனர். திருவிழாவின் 10-ம் நாள் (மே 25) எடுப்புச் சப்பரம் சப்தாவர்ணத்தில் எழுந்தருளி, திருத்தேர் தடம் பார்த்தல் நிகழ்வு நடந்தது.

11-ம் நாளான இன்று காலை 10.15 மணியளவில் குதிரை வாகனத்தில் புறப்பாடாகினார். மேலமாசி வீதி, வக்கீல் புதுத்தெரு வழியாக வைகை ஆற்றில் வியூக சுந்தரராஜ பெருமாள் இறங்கினார். தற்போது வைகை ஆற்றில் தண்ணீர் செல்வதால் வைகை ஆற்று பாலம் வழியாக ஆழ்வார்புரம் சென்று அங்குள்ள திவான் ராமராயர் மண்டபத்தில் எழுந்தருளினார்.

அங்கு இரவு தொடங்கி விடிய, விடிய தசாவதாரம் நிகழ்ச்சி நடைபெறும். மே 27-ம் தேதி காலை 7 மணிக்கு மோகினி திருக்கோலத்துடன் பத்தியுலா முடிந்ததும், காலை 9 மணியளவில் கருட வாகனத்தில் பெருமாள் புறப்பாடு நடைபெறுகிறது. ராமராயர் மண்டபத்திலிருந்து புறப்பட்டு பனகல் சாலை, யானைக்கல், கீழமாசி வீதி, அம்மன் சன்னதி தெரு, கீழாவணி மூல வீதி வழியாக தெற்காவணி மூல வீதி, கன்னிகா பரமேஸ்வரி அம்மன் சத்திரத்தில் எழுந்தருள்கிறார். மாலை 4 மணிக்கு திருமஞ்சனமாகி இரவு 7 மணிக்கு குதிரை வாகனத்தில் கோயிலுக்கு புறப்படுகிறார்.

13-ம்நாள் இரவு விடையாற்றி உற்சவம் நடைபெறுகிறது. 14-ம் நாள் 10.30 மணியளவில் உற்சவ சாந்தி அலங்காரத் திருமஞ்சனம் முடிந்து 11.30 மணிக்கு ஆஸ்தானம் சேருகிறார். இத்துடன் திருவிழா நிறைவுபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் ந.யக்ஞ நாராயணன் தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்துவருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE