ஆழ்வார்கள் பன்னிருவரில் தொண்டரடிப் பொடியாழ்வார் இரு பாமாலைகளை இயற்றினார். திருவரங்கம் திருவரங்கநாதனை துயில் எழுப்புவதாக பாடப்பட்ட திருப்பள்ளியெழுச்சி, உலகத்தாருக்கு அறிவுரை கூறுவதாக அமைந்த திருமாலை ஆகிய இரண்டிலும், திருவரங்கநாதனைத் தவிர வேறு எந்தத் தலத்து பெருமாளையும் அவர் பாடவில்லை.
இவரைத் தவிர மற்ற ஆழ்வார்கள் அனைவரும் திருமலை திருப்பதி குறித்து பாசுரங்களை இயற்றி இருக்கிறார்கள். முதல் ஆழ்வார்கள் எனப்போற்றப்படும் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவர் தொடங்கி, கடைசியாக அவதரித்த திருமங்கை ஆழ்வார் வரை அனைவரும் திருமலை திருவேங்கடமுடையானைக் குறித்து இன்தமிழ்ப் பாசுரங்களைப் பாடியிருக்கிறார்கள்.
பொய்கையாழ்வார்
ஆழ்வார்களில் முதலாமவரான பொய்கையாழ்வார் தமது ‘முதலாம் திருவந்தாதி’ என்ற 100 பாடல்கள் கொண்ட பிரபந்தத்தில், மானிடரின் வினைகள் அனைத்தையும் தீர்த்து அருள்செய்யும் திருவேங்கடவனின் திறத்தையும், திருவேங்கடமலையின் அழகையும் பாடுபொருளாகக் கொண்டு பத்து பாசுரங்களை இயற்றி இருக்கிறார்.
பூதத்தாழ்வார்
இரண்டாவது ஆழ்வாரான பூதத்தாழ்வார், தாம் திருமால் பக்தியில் பெற்ற அனுபவத்தை 100 பாடல்கள் கொண்ட இரண்டாம் திருவந்தாதியாக அருளிச் செய்துள்ளார். அதில் ஒன்பது பாசுரங்கள் திருவேங்கடவனின் சுவாமித்துவத்தையும், திருமலையின் பொலிவையும் எடுத்துரைக்கின்றன.
பேயாழ்வார்
சென்னை மைலாப்பூரில் அவதரித்த பேயாழ்வார், திருமால் பக்தியில் ஆழங்கால்பட்டு மூன்றாம் திருவந்தாதி என்ற 100 பாசுரங்களை இயற்றினார். இதில் 19 பாசுரங்கள் திருவேங்கடவனை நினைத்து பாடப்பட்டன. திருவேங்கடவனின் பரத்துவ நிலை. அவதார நிலை, திருமலையின் இயற்கை எழில் ஆகியவற்றின் பெருமையை இவை 19 பாசுரங்களும் வெளிப்படுத்துகின்றன.
திருமழிசையாழ்வார்
சென்னை திருமழிசையில் அவதரித்த திருமழிசையாழ்வார் இயற்றிய திருச்சந்த விருத்தம், நான்முகன் திருவந்தாதி ஆகிய இரண்டு பிரபந்தங்கள் மொத்தம் 216 பாசுரங்களைக் கொண்டவை. இவற்றில் திருவேங்கடத்தில் உறையும் செல்வனைப் பற்றியும், அவன் நின்றிருக்கும் திருமலையின் அழகைக் குறித்தும் 14 பாசுரங்கள் விவரிக்கின்றன.
நம்மாழ்வார்
ஆழ்வார்கள் அனைவரையும் அவயங்களாகவும், தான் அவயவியாகவும் சிறப்பு பெற்றவர் சுவாமி நம்மாழ்வார். தாமிரபரணிக் கரையில் உள்ள ஆழ்வார்திருநகரியில் அவதரித்தவர்.
இவர் நான்கு பிரபந்தங்களை இயற்றினார். திருவேங்கடத்து எம்பெருமான் தனது வாத்ஸல்ய குணத்தை அதாவது தாயின் அன்பை நம்மாழ்வாருக்கு காட்டிக் கொடுத்தார். அந்த மகிழ்ச்சியின் பயனாய் திருவாய்மொழியில் 35 பாசுரங்களை திருவேங்கடவனைக் குறித்து நம்மாழ்வார் பாடினார். அடுத்து, திருவேங்கடவனை பாட்டுடைத் தலைவனாகவும், தன்னை தலைவியாகவும் பாவித்து நம்மாழ்வார் எட்டு பாசுரங்களை திருவிருத்தத்தில் பாடி இருக்கிறார்.
அடுத்து பெரிய திருவந்தாதி என்ற பிரபந்தத்தில் தனது உள்ளத்தில் உறையும் திருவேங்கடவனின் நிலையை விளக்குவதாக ஒரு பாசுரத்தை நம்மாழ்வார் பாடி இருக்கிறார்.
ஏழுமலையான், “ஆழ்வாரே! நம்மோடு கலந்து பரிமாறுவதற்கு இப்பிறப்பு தடையில்லை. உம்மை அடிமை கொள்வதற்காக அல்லவா திருவேங்கடமலையில் நிற்கிறேன். அங்கு வந்து அடிமை செய்து வாழலாமே” என்று தனது நிலையை ஆழ்வாருக்கு காட்டிக் கொடுத்தான்.
உடனே நம்மாழ்வாரும், ‘ஒழிவில் காலமெல்லாம்’ என்று தொடங்கும் பதிகத்தில், நமது வாழ்நாள் முழுவதும் திருவேங்கடவனின் திருவடிகளுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்று நமக்கெல்லாம் அறிவுரை கூறுகிறார்.
‘உலகமுண்ட பெருவாயா’ என்று தொடங்கும் பதிகத்தில், மகாலட்சுமித் தாயாரை வேண்டிக் கொண்டே திருவேங்கடமுடையானை சரணம் அடைகிறார்.
குலசேகராழ்வார்
கேரளத்தில் திருவஞ்சிக்களத்தில் அவதரித்த குலசேகராழ்வார் இயற்றிய ‘பெருமாள் திருமொழி’ என்ற 105 பாசுரங்களில், பத்து பாசுரங்களை திருவேங்கடவன் நிமித்தமாக இயற்றினார். அவற்றில் ஏழுமலையப்பன் வாசம் செய்யும் திருமலையில் படிக்கல்லாகவோ, குருகாகவோ, காட்டாறாகவோ, செண்பக மரமாகவோ, மீனாகவோ, அல்லது ஏதாவது ஒன்றாகவோ பிறப்பேன் என்று வேண்டுகிறார்.
பெரியாழ்வார்
ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்த ஸ்ரீபெரியாழ்வார், தாம் இயற்றிய ‘பெரியாழ்வார் திருமொழி’ எனப்படும் 473 பாசுரங்களில், ஏழு பாசுரங்களை திருவேங்கடவனுக்கு உரித்தாக்கினார். இவை ஏழு பாசுரங்களும் திருவேங்கடவனை ஸ்ரீராமபிரானாகவும், ஸ்ரீகண்ணபிரானாகவும் கருதிப் பாடினவையாகும்.
ஆண்டாள்
ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வாரின் திருமகளாக அவதரித்த ஆண்டாள் நாச்சியார், திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகிய இரண்டு பிரபந்தங்களை இயற்றினார். நாச்சியார் திருமொழியில் 16 பாசுரங்கள் திருவேங்கடவனைப் பற்றி பாடப்பட்டவை. அவற்றில் ‘விண்ணீல மேலாப்பு’ என்னும் பதிகம் மேகம் விடு தூதாக அமைந்ததாகும். தன்னைக் கலந்து பிரிந்தபோது எம்பெருமான் கார்காலத்தில் வருவதாகச் சொல்லிச் சென்றான். கார்காலமும் வந்தது. மேகங்கள் சூழ்ந்திருக்கக் கண்டு எம்பெருமான் வரவில்லையே என்று ஏங்கி, தன் துயரத்தை மேகங்களைப் பார்த்து ஆண்டாள் நாச்சியார் உரைக்கிறாள். தனது துயரத்தை வேங்கடவனிடம் சென்று உரைக்குமாறு மேகங்களை வேண்டுகிறாள்.
“வீண்ணீல மேலாப்பு விரித்தாற்போல் மேகங்காள்!
தெண்ணீர்பாய் வேங்கடத்து என் திருமாலும் போந்தானே?
கண்ணீர்கள் முலைக்குவட்டில் துளிசோரச் சோர்வேனைப்
பெண்ணீர்மை யீடழிக்கும் இது தமக்கு ஓர் பெருமையே”
- ஆண்டாள் நாச்சியார் (நாச்சியார் திருமொழி).
விளக்கம்: நீல வண்ணத்தில் விண்ணுக்கு முந்தானை விரித்தாற் போன்று காட்சி தரும் மேகங்களே! தெளிந்த நீர் பாயும் ஆறுகளைக் கொண்ட திருவேங்கட மலைக்கு செல்கிறேன் என்று கூறி என் திருமால் போய்விட்டான். அவனைக் காணாமல் கண்கள் சொரியும் கண்ணீரானது என் மார்பை நனைத்து, என்னை சோர்வுறச் செய்கிறது. ஏழைப் பெண்ணை ஏமாற்றுதல் உமக்கு பெருமையாகாது என்று அவனிடம் சென்று உரையுங்கள்.
இதே பாணியில் இயற்றப்பட்ட 10 பாடல்களும் பக்தியையும், தமிழின்பத்தையும் அளிக்கக் கூடியவை.
திருப்பாணாழ்வார்
திருச்சிக்கு அருகேயுள்ள உறையூரில் அவதரித்த திருப்பாணாழ்வார், ‘அமலனாதிபிரான்’ என்ற 11 பாடல்களைப் பாடினார். திருவரங்கத்தில் உறையும் திருவரங்கநாதன் மீது பாடப்பட்ட இப்பாடல்களில் இரு பாடல்கள் திருவேங்கடவனைப் பற்றி பாடப்பட்டவை.
திருவரங்கத்தின் தெற்கு வாசல் வழியாக வந்த திருவேங்கடவன், பாம்புப் படுக்கையின் மீது பள்ளிகொண்டு திருவரங்கனாக காட்சி அளிக்கிறான் என்று போற்றுகிறார்.
திருமங்கையாழ்வார்
திருமாலின் திருக்குணங்களையும், அதன் பெருமைகளையும் ஆறு பிரபந்தங்களாக, 1,137 பாடல்களாகப் பாடியவர் திருமங்கையாழ்வார். சீர்காழி அருகே திருக்குறையலூர் என்ற நகரில் அவதரித்தவர். இவற்றில் ‘பெரிய திருமொழி’யில் 50 பாசுரங்களும், திருக்குறுந்தாண்டகத்தில் ஒரு பாசுரமும், திருநெடுந்தாண்டகத்தில் மூன்று பாசுரங்களும், பெரிய திருமடல், சிறிய திருமடல் ஆகியவற்றில் தலா ஒரு அடியும் திருவேங்கடவன் குறித்து பாடியிருக்கிறார்.
‘கொங்கலர்ந்த மலர்க்குருந்தம்’ என்று தொடங்கும் முதற்பத்து, எட்டாம் திருமொழியில் திருமலையின் இயற்கை எழிலைக் காட்டி, அங்கு உறையும் திருவேங்கடவனின் தன்னிகரில்லாத தன்மைகளைச் சுட்டிக் காட்டி, அப்படிப்பட்ட திருமலைக்கு சென்று ஏழுமலையானின் திருவடிகளைத் தஞ்சமடைந்து உய்யுமாறு அறிவுறுத்துகிறார் ஆழ்வார்.
ஆழ்வார்கள் போற்றிப்பரவிய திருவேங்கட மாமலையில் உறையும் எம்பெருமானை நித்தம் பணிவோம்.