இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்படும் கோயில்களுக்கு ஏற்கனவே 5 பெண் ஓதுவார்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தனர். இப்போது மேலும் 5 பெண் ஓதுவார்கள் உள்பட 15 ஓதுவார்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் சேகர் பாபு வழங்கினார்.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இன்று நடந்த விழாவில் பாடி திருவல்லீஸ்வரர் கோயில்-பார்கவி, வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் சுவாமி கோயில்-தாரணி, ராயப்பேட்டை சித்தி புத்தி விநாயகர் மற்றும் சுந்தரேஸ்வரர் கோயில்-சாருமதி, மயிலாப்பூர் முண்டக கண்ணியம்மன் கோயில்-சிவரஞ்சனி, சைதாப்பேட்டை சிவ சுப்பிரமணிய சுவாமி கோயில்-கோமதி. ஆகிய 5 பெண்களுக்கு ஓதுவார் பணி நியமன ஆணைகளை அமைச்சர் சேகர் பாபு வழங்கினார்.
இதனை தொடர்ந்து அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களிடம் கூறுகையில், திராவிட மாடல் ஆட்சியில் ஏற்கனவே 5 திருக்கோயில்களில் பெண் ஓதுவார்கள் பணிபுரிந்து வருகிறார்கள். தற்போது புதிதாக நியமிக்கப்பட்டிருக்கின்ற 15 ஓதுவார்களில் 5 பெண் ஓதுவார்கள் இடம் பெற்றுள்ளனர். இறைவனுக்கு செய்யப்படுகின்ற வழிபாடுகளின் போது ஓதுவார்கள் அனைத்து திருக்கோயில்களிலும் நியமிக்கப்படுகின்ற முயற்சியை துறை எடுத்து வருகிறது.
இதுவரையில் திருக்கோயில்களில் இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு சுமார் 34 ஓதுவார் பணியிடங்கள் நிரப்பப்பட்டு இருக்கின்றன. ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள 183 ஓதுவார் பணியிடங்களில் இதுவரை 107 ஓதுவார்கள் திருக்கோயில்களில் பணிபுரிந்து வருகின்றார்கள். படிப்படியாக அனைத்து திருக்கோயில்களில் ஓதுவார் பணியிடங்களை விரைவில் நிரப்புவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
ஏற்கனவே அர்ச்சகர் பயிற்சி பயின்ற 3 பெண்கள் விரைவில் உதவி அர்ச்சகர் பணிக்கு நியமிக்கப்பட இருக்கின்றார்கள். அர்ச்சகர் பயிற்சி பள்ளிகளில் பயிற்சி முடித்தவர்களுக்கு கோவில்களில் உதவி அர்ச்சகர்களாக ஓராண்டுக்கு பயிற்சி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவர்களுக்கு மாதாந்திர ஊக்கத்தொகையாக ரூ.8 ஆயிரம் வழங்கப்படும் என்றார்.