புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு மாவிளக்கு ஏற்றி வழிபடுவது ரொம்பவே மகத்துவம் வாய்ந்தது. நம் கிரக தோஷங்களைப் போக்கியருளுவார் திருமால் என்பது ஐதீகம்.
பொதுவாகவே சனிக்கிழமை என்பது பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த நாளாகப் போற்றப்படுகிறது. புதன்கிழமை மற்றும் சனிக்கிழமை மகாவிஷ்ணுவை வழிபடுவதற்கு உரிய நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது.
மேலும், சனிக்கிழமை என்பது சனீஸ்வர பகவானுக்கு உரிய நாள். சனீஸ்வர பகவானால் நமக்கு ஏற்படும் கெடுபலன்களையும் தடைகளையும் விஷ்ணு வழிபாடு போக்கவல்லது.
புரட்டாசி மாதம் முழுவதுமே திருமால் வழிபாட்டுக்கு உகந்தது தான் என்றாலும் சனிக்கிழமை ரொம்பவே விசேஷமானது.
சனிக்கிழமைகளில் விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள், ‘புரட்டாசி சனிக்கிழமை விரதம்... பச்சைத்தண்ணி கூட பல்லுல படாது’ என்று சொல்பவர்களும் உண்டு. அதேசமயம் உண்ணாநோன்பு இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, பெருமாள் வழிபாட்டைச் செய்யும் அனைவருக்குமே பலன்கள் கிடைப்பது உறுதி.
புரட்டாசி சனிக்கிழமையன்று, பெருமாளுக்கு மாவிளக்கு ஏற்றி வழிபாடு செய்வது நம் வாழ்க்கையில் இதுவரை இருந்து வரும் தடைகள் அனைத்தையும் தகர்த்து அருளும் என்பது ஐதீகம்.
பச்சரிசியில் வெல்லம் கலந்து அதைக் குழைவாக்கி, உருண்டைபோல் செய்து, நடுவே லேசாகக் குழியிட்டு, அதில் தீபம் ஏற்றி பெருமாளை வழிபட்டு, அந்த பிரசாதத்தை ஆலயத்துக்கு வந்திருக்கும் பக்தர்களுக்கோ அக்கம்பக்கத்தாருக்கோ வழங்கலாம். பச்சரிசி மாவால் செய்யப்பட்ட உருண்டையை திருமலையாகவும் அதில் எரிகின்ற தீபத்தை பெருமாளாகவும் வழிபடுவது வழக்கம்.
சனிக்கிழமைகளில் குலதெய்வ வழிபாடு செய்வதும் அவசியம். குலதெய்வம் எது என்று தெரியாத பலரும் திருப்பதி வேங்கடவனையே குலதெய்வமாக வழிபடுவதும் வழக்கத்தில் இருக்கிறது.
இடித்த பச்சரிசி, வெல்லப்பாகு, கொஞ்சம் ஏலக்காய், எள் முதலானவற்றைக் கலந்து மாவாக்கி, அதில் விளக்கு ஏற்றி வழிபடவேண்டும். குலதெய்வம் தெரிந்தவர்கள், புரட்டாசி சனிக்கிழமைகளில் வீட்டிலேயே ஆத்மார்த்தமாக குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவு செய்யலாம். அதேபோல் நம் வீட்டுக்கு அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று மாவிளக்கு ஏற்றி வழிபடலாம். மாவிளக்கில் கொஞ்சமாக நெய் விட்டு தீபமேற்றுவது, இல்லத்தில் உள்ள தரித்திர நிலையைப் போக்கி, ஐஸ்வர்ய பாக்கியங்களை அள்ளித்தரும்.
புரட்டாசி மாத சனிக்கிழமையன்று பெருமாளுக்கு மாவிளக்கேற்றி வழிபடுவோம். மங்காத செல்வங்கள் அனைத்தையும் தந்து, நம்மை மகிழ்ச்சியும் அமைதியுமாக வாழச் செய்வார் மகாவிஷ்ணு!