ராமர் கோயில் திறப்பு விழா: அத்வானி, முரளி மனோகர் ஜோஷி பங்கேற்கவில்லை; என்ன காரணம்?

By காமதேனு

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க வேண்டாம் என பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில்.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இப்பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. வரும் ஜனவரி 22ம் தேதி மூலவர் ராம் லல்லா சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார்.

இந்நிலையில், அயோத்தியில் ராமர் கோயிலுக்காக போராட்டம் நடத்தியவர்களில் பாஜகவின் முன்னணி தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர், ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதுகுறி்த்து ராமர் கோயில் அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பத் ராய் செய்தியாளர்களிடம் கூறுகையில், ``அத்வானி, முரளி மனோகர் ஜோஷி இருவரும் குடும்பத்தின் பெரியவர்கள். அவர்களின் வயது, உடல்நிலையை கருத்தில் கொண்டு ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு வர வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டனர். அதை அவர்கள் இருவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

அயோத்தி ராமர் கோயில் கட்டுமானம்.

கோயிலின் அனைத்துப் பணிகளும் வரும் ஜனவரி 15ம் தேதி நிறைவடைந்துவிடும். 16ம் தேதி முதல் 22ம் தேதி வரை தொடர்ந்து பூஜைகள் நடைபெறும். 22ம் தேதி, ராம்லல்லா பிரதிஷ்டை விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார் என்றார்.

அத்வானிக்கு தற்போது 96 வயதாகிறது. முரளி மனோகர் ஜோஷி அடுத்த மாதம் 90வது வயதை எட்டுகிறார். ராமர் கோயில் திறப்பு விழாவில், சங்கராச்சாரியார்கள், 150 ரிஷிகள் பங்கேற்க உள்ளனர். மேலும், நாடு முழுவதுமிருந்து 4000க்கும் மேற்பட்ட துறவிகள், 2200க்கும் மேற்பட்ட இதர விருந்தினர்கள் பங்கேற்க உள்ளனர்.

காசி விஸ்வநாதர், வைஷ்ணவ தேவி போன்ற நாடு முழுவதும் உள்ள முக்கிய கோயில்களின் தலைமை கர்த்தாக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆன்மிக தலைவர்களான தலாய்லாமா, மாதா அமிர்தானந்தமயி, யோகா குரு பாபா ராம்தேவ், திரை நட்சத்திரங்கள் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், மாதுரி தீக்ஷித், அருண் கோவில், தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, பிரபல ஓவியர் வாசுதேவ் காமத், இஸ்ரோ இயக்குநர் நிலேஷ் தேசாய் உள்ளிட்ட பல்வேறு ஆளுமைகள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க உள்ளனர்.

ஜனவரி 23ம் தேதி முதல் கோயிலில் பொதுமக்கள் வழிபட அனுமதிக்கப்படுவர். ஜனவரி 24ம் தேதி முதல் 48 நாள்களுக்கு மண்டல பூஜை நடைபெறும் என ராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE