புரட்டாசி திருவோணத்தில் பூலோகம் வந்த புண்ணியன்!

By மு.இசக்கியப்பன்

“செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே

நெடியானே வேங்கடவா! நின்கோவிலின் வாசல்

அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்

படியாய்க் கிடந்துநின் பவளவாய்க் காண்பேனே!”

- குலசேகர ஆழ்வார் (பெருமாள் திருமொழி).

பொருள்: “எத்தனையோ பிறவிகளாக தீர்க்கவியலாமல் தொடர்ந்துவரும் பாவங்களைத் தீர்க்கும் வல்லமை வாய்ந்த, திருவேங்கட மலையில் வாசம் செய்யும் திருவேங்கடமுடையானே, அடியவர்களும், தேவாதி தேவர்களும், அரம்பையர்களும் மிதித்து வரக்கூடிய ஒரு படிக்கல்லாக உன் கோயில் வாசலில் கிடப்பேன். அவ்விதமே கிடந்து உன் பவளவாயைக் கண்டுகொண்டே இருப்பேன்”.

திருப்பதி

“வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்” என்ற தொல்காப்பியக் கூற்றின்படி தமிழகத்துக்கு எல்லையாகத் திகழ்ந்தது திருவேங்கடம். சேர, சோழ, பாண்டியர் என மூன்று நாடுகளிலும் அவதரித்தவர்கள் பன்னிரு ஆழ்வார்கள். இவர்களில் 11 ஆழ்வார்கள் தங்களின் தேனிலும் இனிய தமிழ்ப் பாசுரங்களால் பாடிய திருத்தலம் திருவேங்கடம். இந்தியாவில் புழக்கத்தில் உள்ள பெரும்பான்மையான் மொழிகளில் திருவேங்கட வரலாறு எழுதப்பட்டுள்ளது.

உலக நன்மைக்காக காஷ்யப மகரிஷியின் தலைமையில் ஒரு பெரிய யாகம் நடைபெற்றது. அப்போது அங்குவந்த நாரத முனிவர், “யாகத்தின் பயனை எந்த மூர்த்திக்கு அளிக்கப் போகிறீர்கள்?” என்று கேட்டார்.

அதற்கு மற்றவர்கள், “பிரம்மா, விஷ்ணு ருத்ரன் என்னும் மும்மூர்த்திகளுக்கும் வழங்கப் போகிறோம்” என்று கூறினார்கள்.

“மானிடர்களிடம் காணப்படும் சகல பாவங்களையும் பொறுமையுடன் ஏற்றுக் கொள்ளும் மூர்த்தி யாரோ அவருக்குத்தான் யாகத்தின் பயனைத் தர வேண்டும்” என்று நாரதர் கூறினார்.

திருப்பதி பிரம்மோற்சவம்

மும்மூர்த்திகளில் மிகப் பொறுமைசாலி யார் என்பதைக் கண்டுபிடிக்கும் வல்லமை நம்மில் யாருக்கு உள்ளது என்று அனைவரும் யோசித்து, பிருகு மஹரிஷியை மூவுலகுக்கும் அனுப்ப எண்ணினர். அவரும் அதற்கு இசைந்தார்.

பிரம்மாவின் சத்திய லோகத்துக்கு முதலில் பிருகு மஹரிஷி வந்தார். அங்கு பிரம்மன் சரஸ்வதி தேவியுடன், ரிஷிகள் புடைசூழ கொலு வீற்றிருந்தார். தான் வந்ததை பிரம்மன் கண்டும் காணாததுபோல் இருக்கிறார் என்று நினைத்து கோபம் கொண்ட பிருகு மஹரிஷி, “கலியுகத்தில் பூவுலகில் உனக்கு கோவில்களும், வழிபாடுகளும் இல்லாமல் போகக்கடவது” என்று சபித்துவிட்டு கைலாயத்துக்கு வந்தார்.

கைலாயத்தில் சிவன், உமையவளோடு ஏகாந்தத்தில் தனித்திருக்க, சிவன் எதிரிலே சென்று நின்றார். அனுமதியின்றி உள்ளே நுழைந்த பிருகுவின் மீது தனது சூலாயுதத்தை ஏவினார். அதிலிருந்து தன்னைக் காத்துக்கொண்ட பிருகு, இவர் பொறுமைசாலி இல்லை என்று தீர்மானித்து, சிவனை நோக்கி, “என்போன்ற ரிஷிகள் எந்த நேரத்தில் எந்த நிலையில் வந்தாலும் வரவேற்பதே உம் போன்றவர்களின் கடமை. அதைவிடுத்து என்மீது கோபம் கொண்டீர். எனவே கலியுகத்தில் பூவுலகில் நீங்கள் இருவரும் (சிவன், உமை) சேர்ந்தது மாதிரியான கோவில்கள் இல்லாமல் போகக் கடவது” என்று சபித்துவிட்டு வைகுண்டம் அடைந்தார்.

அங்கே திருமகள் பாதம் வருட அறிதுயிலமர்ந்த ஸ்ரீ மகாவிஷ்ணு சற்றேனும் இவரை ஏறெடுத்துப் பார்க்கவில்லை. பிருகு முனிவர் மிகவும் வெகுண்டார். மிக விரைந்து திருமாலை நோக்கிச் சென்றார். அப்போதும் அவர் திரும்பிப் பார்க்கவில்லை. தனது காலால் திருமாலின் மார்பில் எட்டி உதைத்தார்.

திடீரென்று அறிதுயில் களைந்த திருமால், முனிவரின் பாதத்தைப் பற்றிக்கொண்டு, “ஐயோ! பாறை போன்ற என் மார்பில் உதைத்த தங்கள் பாதங்கள் எப்படி நோகிறதோ” என்று அந்தப்பாதத்தை தமது இருகரங்களால் தாங்கி நீவி விட ஆரம்பித்தார். தன் தவற்றை உணர்ந்த பிருகு, கண்களில் தாரை தாரையாக நீர்பெருக்கெடுக்க மன்றாடி மன்னிப்புக் கேட்டு மனம் பதைபதைக்க, தான் வந்த காரியத்தையும் தெரிவித்து விட்டு, பூலோகத்துக்கு திரும்பினார்.

திருப்பதி பிரம்மோற்சவம்

தான் வசிக்கும் தமது மணாளனின் மார்பில், தன்முன்னே முனிவர் காலால் உதைத்ததை பொறுக்கவியலாத மகாலட்சுமி வைகுண்டத்தை விட்டு விலகி பூவுலகுக்கு வந்து மறைந்திருந்து தவம் செய்து வரலானார். திருமகள் இல்லாத வைகுண்டம் களையிழந்தது. திருமாலுக்கு திருமகளின் பிரிவு துயரைத் தந்தது. எனவே திருமாலும், புரட்டாசி மாதம் திருவோணம் நட்சத்திரத்தன்று, பூலோகத்தில் ரம்மியமான சூழ்நிலையில், ஏழு மலைகளுடன் விளங்கிய திருமலை திருப்பதியில் ஒரு புளியமரத்தின் புற்றில் ஸ்ரீநிவாசன் என்ற திருப்பெயருடன் எழுந்தருளி வசித்து வந்தார்.

இதனை மையப்படுத்தியே, ஆண்டுதோறும் திருமலை திருப்பதியில் புரட்டாசி பிரம்மோற்சவம் 10 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

திருப்பதி

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE