69 கிலோ தங்க நகைகள், 295 கிலோ வெள்ளி ஆபரணங்கள்! உலக பணக்கார விநாயகரை கண்காணிக்கும் கேமரா

By காமதேனு

69 கிலோ தங்க ஆபரணங்கள், 295 கிலோ வெள்ளி ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு மும்பையில் நிறுவப்பட்டுள்ள விநாயகர் சிலை உலகில் பணக்கார விநாயகர் சிலையாக கருதப்படுகிறது.

தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தியையொட்டி பல்வேறு பகுதிகளிலும் வித்தியாசமான வழிகளில் விநாயகர் சிலைகள் வைத்து மக்கள் வழிபாடு செய்தனர்.

தமிழகத்தைவிட மகாராஷ்டிராவில் விநாயகர் சதுர்த்தி மிக விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். மகாராஷ்டிரா முழுவதும் விநாயக சதுர்த்தி 10 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்த ஆண்டு திருவிழா இன்று தொடங்கி செப்டம்பர் 29ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற இருக்கிறது.

அதற்காக மகாராஷ்டிராவில் மும்பையில் கவுட் சரஸ்வத் பிராஹ்மன் (ஜிஎஸ்பி) சேவா மண்டல் சார்பில் இந்தியாவின் பணக்கார விநாயகர் சிலையை அமைத்துள்ளனர். இந்தச் சிலைக்காக அவர்கள், 69 கிலோ கிராம் தங்க ஆபரணங்களுடனும், 295 கிலோ கிராம் வெள்ளிப் பொருட்களுடனும் கூடிய மிகப் பணக்கார விநாயகரை வடிவமைத்துள்ளனர்.

முதல்முறையாக, முழுக்க முழுக்க தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களுடன் இருக்கும் இந்த விநாயகரை, பாதுகாக்கும் நோக்கில் ஆங்காங்கே கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும், இந்த விநாயகர் சிலைக்காக ரூபாய் 360.45 கோடி அளவுக்கும் இன்சூரன்ஸ் எடுக்கப்பட்டுள்ளது.

69வது 'கணபதி உத்சவ்' கொண்ட்டாட்டத்தை நடத்தும் சேவா மண்டல் அமைப்பு, இன்று சந்திரயான் -3 வெற்றிக்காக சிறப்புப் பூஜைகளும், நாளை அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் வெற்றிகரமாக முடிந்து, திறப்பு விழா காண்பதற்காகச் சிறப்புப் பிரார்த்தனைகளும் செய்யப்படும் என தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE