பஞ்ச கிருஷ்ண ஷேத்ர தலங்களில் திருக்கண்ணமங்கை, கபிஸ்தலம், திருக்கோவிலூர் ஆகிய மூன்று தலங்களை தரிசிக்க இருக்கிறோம்.
திருக்கண்ணமங்கை
திருப்பாற்கடலை ஸ்ரீமகாவிஷ்ணு கடைந்த போது சந்திரன், கற்பகத் தரு, காமதேனு என்று ஒவ்வொன்றாகத் தோன்றி இறுதியில் மகாலட்சுமி தோன்றினாள். பெருமானின் அற்புதமான திருவழகைக் கண்டு மிகவும் நாணமுற்ற திருமகள், காவிரிக்கரையில் அமைந்துள்ள திருக்கண்ணமங்கைக்கு வந்து, எம்பெருமானைக் குறித்து மவுன தவம் இருக்கலானாள். தேவியின் தவத்தால் மகிழ்ந்த எம்பெருமான், தனது பாற்கடலைக் கைவிட்டு இத்தலத்துக்கு வந்து தேவியை மணம் கொண்டார். இதனால் திருக்கண்ணமங்கையில் மூலவருக்கு ‘பெரும்புறக்கடல்’ என்பது திருநாமம். பக்தவத்சலப் பெருமாள், பத்தராவிப்பெருமாள் என்றும் அழைக்கின்றனர். மிக உயர்ந்த திருமேனியாக கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம். மகாலட்சுமி தாயாருக்கு இத்தலத்தில் கண்ணமங்கை என்பது பெயர்.
இங்கு நடந்த பெருமாளின் திருமணத்தைக் காண தேவர்கள் கூட்டம் கூட்டமாக வந்து குவிந்ததோடு, எப்போதும் இத்திருக் கோலத்தைக் கண்டு கொண்டே இருக்க வேண்டும் எனக் கருதி, தேனீக்களாக உருவெடுத்து கூடு கட்டி அதிலிருந்து கொண்டு தினமும் கண்டு மகிழ்கிறார்கள் என்பது ஒரு ஆச்சரியப்படத்தக்க வரலாறு. இன்றும் தாயார் சன்னதியில் வடபுறம் உள்ள மதிலின் சாளரத்திற்கு அருகில் ஒரு தேன்கூடு உள்ளது. எத்தனை நூற்றாண்டுகளாக இது இங்குள்ளது என்று யாராலும் சொல்ல இயலாது. இந்தக் கூட்டினைச் சுற்றி வாழும் தேனீக்கள் யாரையும் ஒன்றும் செய்வதில்லை. 108 திவ்ய தேசங்களில் இங்கு இது ஓர் அற்புதமாகும்.
கிருஷ்ண மங்கல தலத்துக்கு இருக்க வேண்டிய விமானம், ஆரண்யம், மண்டபம், தீர்த்தம், ஷேத்ரம், நதி, நகரம் என்ற ஏழு லட்சணங்களும் இத்தலத்தில் அமையப் பெற்றதால் “ஸ்ப்த புண்ய ஷேத்ரம்” அல்லது “ஸப்தாம்ருத ஷேத்ரம்” என்று அழைக்கப்படுகிறது. சோழ நாட்டு திருப்பதிகளில் ஒன்றான திருக்கண்ணமங்கை திருவாரூர் அருகே அமைந்துள்ளது.
கபிஸ்தலம்
பஞ்ச கிருஷ்ண தலங்களில் நான்காவது திருத்தலம் கபிஸ்தலம். கும்பகோணம் அருகேயுள்ள பாவநாசத்துக்கு அருகில் அமைந்திருக்கிறது. கஜேந்திர மோட்சம் நடந்த தலம் இது என்று கூறப்படுகிறது.
மூலவர் கஜேந்திர வரத பெருமாள், புஜங்க சயனத் திருக்கோலத்தில் சயனித்திருக்கிறார். ரமாமணிவல்லித் தாயார் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். யானையாக இருந்த இந்திரத்யும்னன் என்ற மன்னனுக்கும், முதலையாக இருந்த கூஹு என்ற கந்தர்வனுக்கும் பெருமாள் இங்கு காட்சி கொடுத்தார். இங்குள்ள தெப்பக்குளத்துக்கு கஜேந்திர மோட்ச தீர்த்தம் என்று பெயர்.
இப்பெருமாளை ஆற்றங்கரை கிடக்கும் கண்ணன் என்று திருமழிசையாழ்வார் தமது பாசுரத்தில் பாடி இருக்கிறார்.
திருக்கோவிலூர்
விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோயிலை, கண்ணன் கோயில் என்றே அழைக்கின்றனர். விண்ணையும், மண்ணையும் அளக்கும் கோலத்தில், வலதுகாலை தரையில் ஊன்றி, இடது காலை விண்ணுக்கு உயர்த்திய திருக்கோலத்தில் பிரம்மாண்ட ரூபத்தில் பெருமாள் இங்கு காட்சி தருகிறார்.
தட்சிண பினாகினி எனப்படும் தென்பெண்ணை ஆற்றங்கரையில் இத்தலம் அமைந்துள்ளது. மார்க்கண்டேயரின் தந்தையான மிருகண்டு முனிவர் எம்பெருமானின் வாமன அவதாரத்தைக் காண விரும்பி தவமியற்றிய தலம்.
மூலவருக்கு திருவிக்ரமன் என்றும், உலகளந்த பெருமாள் என்றும் திருப்பெயர். இப்பெருமான் விராட் புருஷனாக இடது கையில் சக்கரம், வலது கையில் சங்கும் கொண்டு, நீருண்ட மேகம் போன்ற திருமேனியுடன், மார்பில் ஸ்ரீவத்ஸம், கண்டத்தில் கௌஸ்துப மணி, காதுகளில் மஹர குண்டலம், வைஜயந்தி வனமாலையுடன், தேஜோமயமாய் ஒளிரும் புன்னகையுடன் சுற்றியும் பிரகலாதன், மகாபலி, சுக்ராச்சார்யார், தேவர்கள், யட்சர்கள், சித்தர்கள், கருடர், விஸ்வக்சேனர் புடை சூழ ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் எழுந்தருளியிருக்கிறார். தாயார் பூங்கோவல் நாச்சியார், புஷ்பவல்லி தாயார் என்னும் திருநாமங்களால் அழைக்கப்படுகிறார். இத்தாயாரின் பெயரான பூங்கோவல் நாச்சியார் என்பதே, திருக்கோவலூர் என்று இந்த ஊருக்கும் பெயராக அமைந்தது.