கிருஷ்ணாரண்ய தலமான திருக்கண்ணபுரத்தில் முற்காலத்தில் மகாவிஷ்ணுவைக் குறித்து தம்மை மறந்து கடும் தவமிருந்த ரிஷிகள், உடல் மெலிந்து ஒரு விரல் அளவாக மாறியிருந்தனர். உபரிசிரவசு என்ற மன்னன், தனது படையுடன் ஒருமுறை இங்கு வந்தபோது, இவர்களை சாமைக் கதிர்கள் என்று எண்ணி வாளால் அறுக்க முயன்றான். இதைக் கண்ட மகாவிஷ்ணு 16 வயது பாலகனாக வந்து மன்னனை எதிர்த்து போர் புரிந்தார். தனது ஆயுதங்கள் அனைத்தும் பாலகனிடம் தோற்றுப் போவதைக் கண்ட மன்னன், ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற எட்டெழுத்து மந்திரத்தைச் சொல்லி அம்பு விடுத்தான். ஆனான் அந்த அம்பு அந்த பாலகனின் திருப்பாதங்களைச் சுற்றிச் சுற்றி வந்தது.
அதிர்ச்சி அடைந்த மன்னன், தன் முன் வந்திருப்பது ஸ்ரீமகாவிஷ்ணுவே என்று எண்ணி அவர் பாதங்களைத் தஞ்சமடைந்தான்.
ரிஷிகளுக்கும், உபரிசிரவசுவுக்கும் மோட்சம் தந்து, பெருமாள் அதே இடத்தில் கோயில் கொண்டார். இதுவே திருக்கண்ணபுரம். இக்கோயிலில் மூலவர் நீலமேகப் பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். உற்சவருக்கு சௌரிராஜன் என்பது திருப்பெயர். செளரி என்ற சொல்லுக்கு யுகந்தோறும் அவதாரம் எடுப்பவர் என்று அர்த்தம். தாயார் கண்ணபுர நாயகி.
நடையழகு காட்டிய தலம்
‘திருவரங்கத்தில் சயனத் திருக்கோலத்தைக் கண்டதுபோல், உனது நடையழகையும் காண வேண்டும்’ என்று வீபிஷணர் கேட்டார்.
உடனே ஸ்ரீரங்கநாத பெருமாள் ‘கண்ணபுரத்தில் காட்டுவோம் வா’ என்று கூறி, வீபீஷணனுக்கு தனது நடையழகை பெருமாள் இங்கு காட்டியதாக ஐதீகம். இன்றும் அமாவாசை தோறும் இந்நிகழ்ச்சியை சித்திரிக்கும் திருவிழா திருக்கண்ணபுரத்தில் நடைபெறுகிறது.
மும்மூர்த்திகளாக காட்சி
இவ்விடத்தில் பெருமாள் மும்மூர்த்திகளாக காட்சி அருளுகிறார். வைகாசி பிரம்மோத்ஸவத்தில் 7-ம் நாளில் ‘ஸ்திதி காத்தருளும்’ நிலையில் மஹாவிஷ்ணுவாகவும், இரவு தர்ப்ப நாளங்களால் கட்டப்பட்டு தாமரை புஷ்பங்களின் மத்தியில் சிருஷ்டி நிலையில் பிரம்மாவாகவும், அன்றே விடியற்காலையில் ஒரு முகூர்த்த நேரம் (1 3/4 மணி நேரம்) ஸம்ஹாரம் செய்யும் ருத்ரனாகவும் (சிவனாகவும்) காட்சியளிக்கிறார். 108 திவ்ய தேசங்களில் இது எங்கும் இல்லாத பெருஞ்சிறப்பு.
மாயமான பாண்டியன்
சித்த சரவசு என்னும் பாண்டிய மன்னன் மணலூரைத் தலநகராகக் கொண்டு ஆண்டான். அவன் தனது மகள் உத்தமையுடன் தாமிரபரணியில் நீராட இறங்கினான். அப்போது திடீரென்று தாமிரபணியில் வெள்ளம் உயர்ந்து உடனே வடிந்து, காணாமல் போய்விட்டது. மன்னனைக் காணாது அவன் மனைவி மக்களும், மந்திரி பிரதானிகளும் திகைத்தார்கள்.
உடனே அனைவரும் அகத்திய முனிவரிடம் சென்று விவரங்களைக் கூறினர். ‘மன்னனும், அவன் மகள் உத்தமையும் திருக்கண்ணபுரத்தில் இருக்கிறார்கள்’ என்று கூறினார்.
அதாவது, கங்கை முதலான சகல தீர்த்தங்களும், தமது பாவங்களைப் போக்க பிரம்மாவை வேண்டின. “சகல பாவங்களையும் போக்கும் கண்ணபுரத்தில் உள்ள நித்ய புஷ்கரணியில் நீராடி அப்பெருமானைத் துதித்தால் எல்லாப் பாவங்களும் உடனே தீரும்’ என்று பிரம்மா கூறினார். உடனே கங்கை, காவிரி, தாமிரபரணி உட்பட சகல தீர்த்தங்களும், இப்புஷ்கரணியில் புகுந்தன. அப்போது தாமிரபரணியில் தீர்த்தமாடிய மன்னனும், அவனது மகளும் சேர்ந்து திருக்கண்ணபுரத்துக்கு வந்து விட்டனர் என்று அகத்திய முனிவர் விளக்கம் அளித்தார்.
பாண்டிய மன்னன் வந்திருப்பதை அறிந்த சோழ மன்னன் உடனே திருக்கண்ணபுரம் வந்து, தனது அரண்மனைக்கு அழைத்துச் சென்றான். பாண்டியன் மகள் உத்தமையை, சோழராஜனின் மகன் சுசாங்கனுக்கு திருமணம் செய்து வைத்ததாகவும் வரலாறு.
நாகை மாவட்டத்தில் அமைந்துள்ள திருக்கண்ணபுரத்தில் மாசி மாதம் மகம் நட்சத்திரத்தில் இங்கு நடைபெறும் விழா மிகவும் சிறப்பானது.