வத்தலகுண்டு: வத்தலகுண்டு அருகே சடையாண்டி கோயில் திருவிழாவில் ஆண்கள் மட்டும் பங்கேற்ற கறி விருந்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டு இரவு முழுவதும் நடந்தது.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே அய்யம்பாளையம் கிராமத்தில் உள்ள சடையாண்டி கோயில் புரட்டாசி திருவிழா நடைபெற்றது. அய்யம்பாளையம் பெரிய முத்தாலம்மன் கோயிலில் இருந்து கரகம் எடுத்து செல்லப்பட்டு சடையாண்டி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தர்களால் நேர்த்திக்கடான நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகளை கோயிலுக்கு வழங்கினர். இந்த ஆடுகள் அடுத்தடுத்து பலியிடப்பட்டன. இதனைத் தொடர்ந்து பலியிடப்பட்ட ஆடுகளை கறித்துண்டுகளாக வெட்டி சமைத்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கும் நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது.
நள்ளிரவில் நடந்த இந்த கறி விருந்தில் ஆண்கள் மட்டுமே பங்கேற்றனர். இரவு தொடங்கி விடிய, விடிய நடந்த திருவிழாவில் வத்தலகுண்டு, பட்டிவீரன்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராம ஆண்கள் திரளானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து பிரசாதமாக நள்ளிரவில் கறிவிருந்து சாப்பிட்டனர். இரவு தொடங்கிய சடையாண்டி கோயில் புரட்டாசி திருவிழா அதிகாலையில் நிறைவு பெற்றது.