ஸ்ரீவைகுண்டம் வரும் பக்தர்கள் அடிப்படை வசதிகளின்றி தவிப்பு - கண்டுகொள்ளுமா அரசு?

By KU BUREAU

தூத்துக்குடி: நவ திருப்பதி கோயில்களில் முதல்தலமான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோயிலில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி நதிக்கரையோரம் நவ திருப்பதி தலங்கள் அமைந்துள்ளன. புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் இந்த நவ திருப்பதி கோயில்களுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இந்நாட்களில் அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நடப்பாண்டு அறநிலையத்துறை சார்பில் 60 வயதுக்கு மேற்பட்டோர் நவதிருப்பதி தலங்களுக்கு இலவசமாக அழைத்துச் செல்லப்படு கின்றனர்.

இந்நிலையில், நவ திருப்பதி கோயில் களில் முதல் தலமாக ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோயில் இருப்பதால், வெளியூர்களில் இருந்துவரும் பக்தர்கள் கார், வேன், பேருந்துபோன்ற வாகனங்களில் அதிகாலை யிலேயே ஸ்ரீவைகுண்டம் கோயிலுக்கு தான் முதலில் வருவார்கள். ஆனால், ஸ்ரீவைகுண்டத்தில் தேவையான அடிப்படை வசதிகள் இல்லாததால் பக்தர்கள் மிகவும் அவதியடைவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக, பாஜக அமைப்புசாரா மக்கள் சேவைபிரிவு தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் இ.சித்திரைவேல் ‘இந்து தமிழ் திசை' நாளிதழிடம் கூறிய தாவது: ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை, குளியலறை, சமையலறை, தங்குமிடம் போன்ற எந்தவித அடிப்படை வசதியும் இல்லை.

பக்தர்கள் சாலையில் வைத்து சமையல் செய்யும் நிலை உள்ளது. ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி சார்பில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தலா 2 கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றை முறையாக பராமரிப்பது இல்லை. தண்ணீர் வசதியும் இல்லை. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரும் நிலையில் இவை போதுமானதாகவும் இல்லை.

கோயிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களுக்கு பேரூராட்சி சார்பில் கட்டணம் வசூலிக்க குத்தகை அளிக்கப் பட்டுள்ளது. கோயிலுக்கு அருகில் வாகனம் வந்தாலே கட்டாயப்படுத்தி கட்டணம் வசூலித்து விடுகிறார்கள். கோயிலிலும் பக்தர்களிடம் பல்வேறு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், பேரூராட்சி நிர்வாகம் மற்றும் அறநிலையத்துறை சார்பில், பக்தர்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும்செய்து கொடுக்கப்படவில்லை.

புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையான கடந்த வாரம் ஏராளமான பக்தர்கள் வந்தனர். அடிப்படை வசதிகள் இல்லாமல் அவர்கள் தவித்ததை காண முடிந்தது. வரும் 28-ம் தேதி இரண்டாவது சனிக்கிழமை வருகிறது. அதற்கு முன்னதாக, பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டும். நடமாடும் கழிப்பறை வசதியை ஏற்படுத்த வேண்டும்.

கோயிலுக்கு எதிரே பொதுப்பணித் துறைக்கு சொந்தமான பழுதடைந்த கட்டிடம் உள்ளது. அந்த கட்டிடத்தை முழுவதுமாக இடித்து அகற்றிவிட்டு அந்த இடத்தில் பக்தர்களுக்கு தேவையான கழிப்பறைகள், குளியலறைகள், சமையல் கூடம், உணவு அருந்தும் கூடம், தங்கும் விடுதி போன்ற வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

மேலும், ஸ்ரீவைகுண்டத்தில் புதிதாக அமைக்க திட்டமிட்டுள்ள பேருந்து நிலையத்தை, கைலாசநாதர் திருக்கோயிலை ஒட்டி புதிதாக அமைக்கப்படும் புறவழிச்சாலை அருகே கழிப்பறை, குளியல் அறை, தங்கும் விடுதி வசதியுடன் அமைத்தால் பக்தர்களுக்கு வசதியாக இருக்கும்.

இது தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியரிடம் மனு அளித்துள்ளோம். இதனை மாவட்ட நிர்வாகம், பேரூராட்சி நிர்வாகம், இந்து சமய அறநிலையத்துறை பரிசீலனை செய்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE