திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் உள்ள பழமையான நடராஜர் ஓவியத்தில் நடராஜரின் முகத்தில் துளையிட்டு மின் விசிறி மாட்டிய சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி தலமாகவும் நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகவும் திருவண்ணாமலை விளங்குகிறது. இங்கு மலையே சிவனாகவும் போற்றி வழிபடப்படுகிறது. ஐந்து சிறிய கோபுரங்களுடன் மொத்தம் 9 கோபுரங்களுடன் திருக்கோயில் அமைந்துள்ளது. சுமார் 1100 ஆண்டுகளுக்கு முன்பாக சோழர்கள், பாண்டியர்கள், ஹொய்சால மன்னர்கள், விஜயநகர மன்னர்கள் உள்ளிட்டவர்கள் காலகட்டத்தில் இந்த திருக்கோவில் படிப்படியாக கட்டப்பட்டுள்ளது.
அண்ணாமலையார் திருக்கோயிலில் உள்ள மண்டபங்கள் மேற்கூரை உத்தரங்களில் பல்வேறு கலைநயம் மிகத் தொன்மை வாய்ந்த அழகிய மூலிகையின் மூலம் ஓவியங்கள் வரையப்பட்டிருக்கும். இந்த அழகிய ஓவியங்களை சிதைக்கும் வகையில் திருக்கோயில் நிர்வாகம் கோயிலில் பல இடங்களில் ஆணிகளை அடிப்பது உள்ளிட்ட பல்வேறு செயல்களை தொடர்ந்து செய்து வருகிறது. அதற்கு பக்தர்கள் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தற்போது அலங்கார மண்டபத்தில் வரையப்பட்டுள்ள நடராஜர் மூலிகை ஓவியத்தின் அருமை தெரியாமல் அதனை சீர்குலைக்கும் வகையில் நடராஜரின் முகத்தில் துளையிட்டு மின்விசிறியை மாட்டியிருக்கிறார்கள். இது பக்தர்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதற்கு பலதரப்பிலும் கண்டனங்கள் எழுந்த நிலையில் கோயில் நிர்வாகம் தற்போது அவசர அவசரமாக மின்விசிறியை அகற்றியுள்ளதாக தெரிகிறது.
இதே போன்று சென்ற வருடம் கார்த்திகை தீபத்திற்கு முன்பாக கோயிலில் சிசிடிவி கேமரா பொருத்துவதற்காக ஒரே கல்லால் செதுக்கப்பட்ட சிலையின் முகத்தை உடைத்து அதில் சிசிடிவி கேமரா பொருத்தபட்டது. தற்போது நடராஜரின் மூலிகை ஓவியத்தின் முகத்தில் கோயில் ஊழியர்கள் துளையிட்டு மின் விசிறியை மாட்டியுள்ளனர்.
மிகவும் பழமை வாய்ந்த தமிழர் பாரம்பரியத்தை வெளிக்காட்டும் வகையில் அமைந்திருக்கும் இது போன்ற ஓவியங்களையும் சிற்பங்களையும் சிதைக்கும் வகையில் தொடர்ச்சியாக இது போன்ற சம்பவங்களை செய்து வரும் கோயில் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
HBD Rajinikanth| பெயர் தந்த ஏ.வி.எம்.ராஜன்... குற்றவுணர்ச்சிக்குத் தள்ளிய அந்த சம்பவம்!
ராமஜெயம் கொலை வழக்கில் திடீர் பரபரப்பு...விசாரணைக்குச் சென்றவர் வெட்டிக்கொலை!
அதிரடி... விதிகளை மீறியதாக 350 மருத்துவக் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!
அதிகாலையில் பெரும் சோகம்... ஏரி உடைந்து ஊருக்குள் பாய்ந்த தண்ணீர்... அலறியடித்து ஓடிய மக்கள்!
2023-ம் ஆண்டில் இந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது... இவைதான்!